பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைக் கொண்டாடும் வகையில் மத்திய அரசும், பாஜகவும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. மேலும் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் தோறும் பாஜக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாகத் தமிழகத்திலும் மத்திய அரசின் சாதனைகள் பற்றி மக்களிடம் விளக்க பொதுக் கூட்டங்களை நடத்த பாஜக முடிவெடுத்துள்ளது. இதையடுத்து பல்வேறு ஏற்பாடுகளை பாஜகவினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் வேலூரில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நாளை நடக்க உள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இதற்காக விமானம் மூலம் இன்று இரவு சென்னை வரும் அமித்ஷா, கிண்டியில் உள்ள பிரபல தனியார் விடுதியில் தங்குகிறார். பின்னர் நாளை காலை 9 மணிக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரையும் சந்தித்துப் பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, நாளை மதியம் சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு வேலூர் செல்கிறார். பிற்பகல் 2.30 மணிக்கு வேலூர் விமான நிலையம் சென்றடையும் அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக பள்ளிகொண்டாவில் உள்ள காந்தனேரிக்கு வருகிறார். அங்கு நடக்கும் பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.