திருப்பத்தூர் மாவட்டம் சோமநாயக்கன்பட்டி பகுதி ஜோலார்பேட்டை - நாட்றம் பள்ளி சாலையில் டாஸ்மாக் பெயர் பலகையே இல்லாமல் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது.
இந்தக் கடையில் கேத்தாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராகவன் என்பவர் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் நிலையில் மதுபான கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் குவாட்டருக்கு 5 ரூபாயும், பீருக்கு 10 ரூபாயும் கூடுதலாகக் கட்டணம் வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து உண்மை தன்மை அறியச் செய்தியாளர்கள் சென்று விளக்கம் கேட்டதற்கு, “நான் யூனியன் லீடர்... அப்படிதான் கூடுதலாகக் கட்டணம் வசூலிப்பேன்” என்று கூறியுள்ளார். தொடர்ந்து, செய்தியாளர்களை படம் பிடித்த அவர், “நீ எங்கே வேண்டுமானாலும் போய் சொல்... என்னை ஒன்றும் செய்ய முடியாது..” என்று மிரட்டும் தொனியில் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் குமாரியிடம் இது சம்பந்தமாக விளக்கம் கேட்க தொடர்பு கொண்டபோது, அவர் நாங்கள் சென்று விளக்கம் கேட்டாலே எங்களையே அப்படித்தான் கூறி மிரட்டுகிறார். யூனியன் லீடர் என்று கூறி அடாவடி செய்கிறார் என்று புலம்பியிருக்கிறர். இவருக்குப் பின்னால் யார் செயல்படுகிறார்கள்/ எந்த தைரியத்தில் இவர் பகிரங்கமாகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்? என்கிற கேள்வி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக இந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.