சேலம் - சென்னை 8 வழிச்சாலை அரசின் நிதியை வீணடிக்கும் திட்டம் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அவர்,
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் தேவையில்லாதது. ஏற்கனவே இரண்டு 4 வழிச்சாலைகள் உள்ளது. எதிர்காலத்தில் அந்த சாலைகள் விரிவாக்கப்பட தேவையும் இருக்கிறது. சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் அரசின் நிதியை வீணடிக்கும் திட்டம்.
கருத்து கேட்பு என்பது சாலை அமைப்பதற்குத்தான். கருத்து கேட்பு என்பது வேறு. ஒப்புதல் வாங்குவது என்பது வேறு. சாலை அமைவதால் சுற்றுச் சூழல் கெடுமா? பயன்கள் ஏற்படுமா? பாதிப்பு ஏற்படுமா? என்று கேட்பதுதான் கருத்து கேட்பு கூட்டம். நிலம் கையகப்படுத்துவதற்கு மத்திய அரசாங்கம் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியிருக்கிறது.
ஒவ்வொரு விவசாயிடமும் தனிப்பட்ட முறையில் அவர்கள் ஒப்புதல் பெற வேண்டும். அந்த ஒப்புதலை எந்த விவசாயிகளிடம் பெற்றுள்ளது இந்த அரசாங்கம். விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என்கிறது சட்டம். சட்டத்திற்கு புறம்பாக நிலங்களை கையகப்படுத்துகிறார்கள். இதனால்தான் விவசாயிகள் கோபத்தில் உள்ளனர்.
விளம்பரத்துக்காக யாரும் போராட்டம் நடத்தவில்லை. தன் சொந்த நிலத்துக்காக 60 வயது, 70 வயது, 80 வயது முதியவர்கள் தன் குடும்பத்தினரோடு நின்று போராடுகின்றனர். நிலத்தை தானாக வந்து கொடுக்கிறார்கள் என்று சொல்கிறார் முதல்வர். அப்படியென்றால் கலெக்டரிடம் மனு கொடுக்கப் போகிறவர்கள் ஏன் தடுக்கப்படுகிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள். விவசாயிகளை அச்சுறுத்தி, மிரட்டி, கொடுமைப்படுத்தி நிலங்கள் வாங்கப்படுகிறது.
ஒவ்வொரு விவசாயிகளிடமும் ஒப்புதல் பெறவேண்டும் என்பது சட்டம். இந்த சட்டத்தை முதலில் நிறைவேற்ற வேண்டும். காவல்துறை தனது கையில் இருப்பதாலும், அதிகாரம் தனது கையில் இருக்கிறது என்பதாலும் விவசாயிகள் மீது வழக்கு போடுகிறார்கள்.
இலகுவாக சம்பாதிக்க வழியை சாலை போடுவதிலும், அதில் கமிசன் பெறுவதிலும், சாலையில் டோல்கேட் அமைத்து அதில் வசூல் செய்வதிலும் அதிகாரம் மற்றும் அதிகாரம் படைத்த தலைவர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். இவ்வாறு கூறினார்.