ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தப்புள்ளி ஊராட்சியில் தாதன்கோட்டை மற்றும் கதிரனம்பட்டியில் ரூ. 26 லட்சம் மதிப்பிலான இரண்டு புதிய அங்கன்வாடி மையங்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தப்புள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தாதன்கோட்டையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதி ரூ.12.45 லட்சம் மற்றும் கதிரனம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு புதிய அங்கன்வாடி மையங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவரும் தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குநர் திலகவதி, கொத்தப்புள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரி அன்பரசு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, ஆத்தூர் நடராஜன், மாவட்ட பொருளாளர் சத்திய மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அங்கன்வாடி மையங்களைத் திறந்து வைத்து குத்துவிளக்கு எற்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அங்குள்ள மழலையர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
அதன் பின்பு பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், “ திமுக ஆட்சியின் போது இப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நியாயவிலைக்கடைகள் திறக்கப்பட்டன. இதுபோல கிராமங்கள் தோறும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சமுதாயக் கூடங்கள் திறக்கப்பட்டதால் கிராமப்பகுதி மக்கள் குறைந்த செலவில் தங்கள் வீட்டு விழாக்களை நடத்தக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திமுக ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் தற்போது ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் ரூ. 250 கோடி மதிப்பில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. தற்போது ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் மலைக் கிராமங்கள் நீங்களாக ஊராட்சிகளில் 196 மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் புதிதாகக் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினசரி பொதுமக்கள் குடி தண்ணீரை பெரும் நிலைமை உருவாகும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழக முதல்வர் திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி குக்கிராமங்களில் கூட தரமான தார்ச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதுபோல கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் தார்ச் சாலைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தார்ச் சாலை அமைக்கப்படுவதால் கிராம விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை எளிதாக நகரங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தைப் பொறுத்தவரை 20 கோடி நாட்கள்தான் தமிழகத்தில் ஒதுக்கியுள்ளார்கள். 3 மாதத்தில் 10 கோடி நாட்களுக்கான பணிகள் நடைபெற்றுள்ளது. 100 நாள் சம்பளத்தை உயர்த்தி ரூ. 290 முதல் 300 வரை உயர்த்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். விரைவில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம் கிராமங்களில் வசிக்கும் பெண்கள் அதிகம் பயன்பெறுவார்கள். 100 நாள் திட்டத்திற்கு ஊதிய உயர்வு, தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியதன் மூலம் கிராமப்புறத்தில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது” என்று கூறினார்.