சென்னையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.
சனாதன விவகாரம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று (08-11-23) விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், “அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பேசினாலும் அதை எதிர்த்து தனி நபர்கள் வழக்குகள் தொடர முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அரசியலமைப்பு சட்டம் மத நம்பிக்கையை மட்டுமல்லாமல் நாத்திக கொள்கையையும் பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஏன் நாத்திகத்தை ஏற்கிறோம்? என்பது குறித்து கருத்துகளை தெரிவிக்கவும் உரிமைகள் வழங்குகிறது. அதனால், சனாதனத்துக்கு எதிராக பேசியதாக வழக்குகள் தொடர முடியாது.
எனவே, இந்த வழக்கை தொடர்ந்து நீதிமன்றத்தில் நேரத்தையும் வீணடித்தது மட்டுமல்லாமல் அமைச்சர் உதயநிதியையும் இந்த நீதிமன்றத்திற்கு இழுத்துள்ளனர். அண்மையில் ஒரு வழக்கை விசாரித்த இந்த நீதிமன்றம், ஒருவரது பேச்சு பிடிக்கவில்லை என்றால் அவருடைய பேச்சை கேட்காமல் இருக்க வேண்டும். பேச்சு பிடிக்கவில்லை என்பதற்காக ஒருவரது கருத்துரிமையை தடுக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. மேலும், சனாதனத்தில் மக்களிடையே ஏற்றத்தாழ்வு மற்றும் தீண்டாமை உள்ளது. எனவே, அவற்றை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்று அண்மையில் கூட தீர்ப்பளித்துள்ளது.
சனாதன மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் மட்டுமல்லாமல் ஏராளமானோர் பேசினார்கள். அந்த கருத்துக்கள் பிடிக்கவில்லை என்றால் கேட்காமல் இருக்க வேண்டும். அதை விட்டு அந்த கருத்துக்களை காது கொடுத்து கேட்டுவிட்டு இப்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஒப்பாரி வைத்து கண்ணீர் வடிக்கக்கூடாது. எனவே, இந்த வழக்கே விசாரணைக்கு உகந்தது அல்ல. மேலும், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.