தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து 2024 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 நடத்தவுள்ளது. 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 5500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள், 1600 க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், 1000க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.
மேலும், இந்தப் போட்டியில் 27 வகையான விளையாட்டுகளுடன், தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக (Demo Sport) இடம்பெற உள்ளது. கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிக்கான திருவள்ளுவர் இலச்சினையை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை, அவரது இல்லத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார். போட்டியின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கேலோ இந்தியா போட்டிக்கான ஏற்பாடுகள் மற்றும் தமிழக பாரம்பரிய விளையாட்டுகள் தொடர்பான ஏற்பாடுகள் குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.