படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் அப்பாவி இளைஞர்கள், இளம் பெண்களிடம் தொடர்ந்து மோசடி செய்து வந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி அருகிலுள்ள பெரிய மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாசிவேல் என்பவரது மகன் ராஜேஷ்(31), சேலம் மாவட்டம், அம்மாபேட்டை கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சீரங்கன் என்பவரது மகன் திலீப் குமார்(22). நண்பர்களான இவர்கள் இருவரும் பல்வேறு நகரங்களில் அவ்வப்போது சென்று அங்குள்ள விடுதிகளில் அறை எடுத்து தங்கிக் கொள்வார்கள். அங்கிருந்தபடி நகரப் பகுதிகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள். அந்த போஸ்டரில் தங்கள் செல்போன் எண்களையும் குறிப்பிடுவார்கள். அந்த எண்களை பார்க்கும் வேலை கிடைக்காத படித்த பட்டதாரி இளைஞர்களும், இளம்பெண்களும் வேலை கேட்டு இவர்களிடம் வருவார்கள். அவர்களிடம், “உங்களுக்கு வேலை தரவேண்டுமானால் எங்கள் கம்பெனியில் டெபாசிட் தொகை கட்ட வேண்டும்” என்று கூறுவார்கள். அதன்படி சில ஆயிரங்களை அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு விடுதியை காலி செய்துவிட்டு மாயமாக மறைந்து விடுவார்கள். அதன்பிறகு அவர்களது செல்போன்களும் இயங்காது. இப்படிப் இவர்களால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் துணிச்சலாக போலீசில் புகார் கொடுத்து இருவரையும் கைது செய்ய வைத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி நகரில் உள்ள நெப்போலியன் தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் 20 வயது மகள் சௌந்தர்யா, கல்லூரியில் படித்து வரும் மாணவியான அவர், கல்லூரியில் படித்துக் கொண்டே ஏதாவது வேலை செய்து அதில் கிடைக்கும் வருவாய் மூலம் தனது படிப்பையும் குடும்பத்திற்கும் உதவி செய்ய வேண்டும் என்று கருதினார்.
கல்லூரிக்குச் சென்று திரும்பும் வழியில் கடந்த அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி கச்சேரி சாலையில் வேலைக்கு ஆட்கள் தேவை என ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை படித்துப் பார்த்தார். அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். செல்போன் எண்ணில் பதில் கூறிய ஆண் ஒருவர், தாங்கள் தங்கியுள்ள விடுதிக்கு நேர்காணலுக்கு வருமாறு கூறியுள்ளனர். அங்கு சென்றபோது ராஜேஷ், திலீப் குமார் இருவரும் அவர்களை "ட்ரூ ஃபியூச்சர் இந்தியா" கம்பெனியின் மேலாளர் என்றும், மற்றொருவர் துணை மேலாளர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
தொடர்ந்து தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டுமானால் 5000 ரூபாய் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். அப்படி செலுத்தும் பணத்திற்கு சில நாட்கள் கழித்து வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி கொள்ளலாம். மேலும் எங்கள் கம்பெனிக்கு நிறைய ஆட்களை சேர்த்து விட்டால் அதில் குறிப்பிட்ட ஒரு தொகையை கமிஷனாக தருவோம் என்று தெரிவித்துள்ளனர். இது உண்மை என்று நம்பிய சௌந்தர்யா, 5000 ரூபாய் பணம் கட்டியுள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் குறிப்பிட்டபடி சௌந்தர்யாவுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் தரவில்லை. இருவரும் விடுதியில் இருந்து திடீரென்று எஸ்கேப் ஆகிவிட்டனர். அவர்களின் தொடர்பு எண்ணும் துண்டிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் கடந்த 3ஆம் தேதி கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் அதே மொபைல் எண்ணை குறிப்பிட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்ற போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்த சௌந்தர்யா, அவர்கள் போஸ்டரில் குறிப்பிட்டிருந்த விடுதியின் மீட்டிங் ஹாலுக்கு நேரில் சென்று அவர்களை சந்தித்து தான் கொடுத்த 5000 பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அவர்கள் மறுநாள் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளும்படி கூறி உள்ளனர். ஆனால், மறுநாள் அவர்கள் இருவரும் மீண்டும் விடுதியை காலி செய்துவிட்டு எஸ்கேப் ஆகி விட்டனர்.
இதனால், சௌந்தர்யா, கள்ளக்குறிச்சி காவல் நிலையம் சென்று போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபர்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அந்தவிடுதி பதிவேட்டில் அவர்கள் குறிப்பிட்டிருந்த முகவரியை வைத்து தேடிச் சென்று அவர்கள் இருவரிடம் விசாரணை நடத்தினர். அவ்விசாரணையில், அவர்கள் தான் சௌந்தர்யாவிடம் மோசடியாக பணம் பறித்த ராஜேஷ், திலீப்குமார் என்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.