கடந்த ஏழாம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்ற வழிப்பறி கொள்ளையில் கொள்ளையர்கள்
திருடி சென்ற 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வெள்ளி ஆபரணங்களை திருப்பதி குற்றப்பிரிவு போலீசார் இன்று பறிமுதல் செய்தனர். இதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தாய், மகனை கைது செய்தனர்.
கடந்த 7ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்ற வழிப்பறி கொள்ளை ஒன்றில் சுமார் 2 கிலோ எடையுள்ள தங்க நகைகள், 15 கிராம் எடையுள்ள வைர ஆபரணங்கள், கால் கிலோ எடையுள்ள வெள்ளி ஆபரணங்கள் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.
இந்த நகைகளை திருவள்ளூர் மாவட்டம் பஞ்சம் தாங்கள் பகுதியை சேர்ந்த ரசூல் என்பவரின் மகன் பைரோஜ் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கடந்த 7 ஆம் தேதி கோயம்பத்தூரில் சுமார் 60 லட்ச ரூபாய்க்கும் மேல் கொண்ட ஆபரணங்களை கொள்ளை அடித்து சென்றார்.
கொள்ளையடிக்கப்பட்ட ஆபரணங்களில் ஒரு சிலவற்றை தன்னுடைய கூட்டாளிகளுக்கு கொடுத்த பைரோஜ், 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களை தன்னுடைய தாய் சமா, சகோதரர் அகமது சலீம் ஆகியோரிடம் ஒப்படைத்தார்.
நகைகளை வீட்டில் வைத்திருந்தால் போலீசார் வந்து பறிமுதல் செய்து விடுவார்கள் என்று கருதிய சமா, அகமது சலீம் ஆகியோர் நகைகளுடன் சொந்த ஊரிலிருந்து வெளியேறி பல்வேறு ஊர்களில் சுற்றி திரிந்தனர். இரண்டு நாட்களுக்கு முன் திருப்பதிக்கு வந்த அவர்கள் இன்று காலை திருப்பதி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது சந்தேகத்தின் பேரில் திருப்பதி குற்றப்பிரிவு பிரிவு போலீசார் இரண்டு பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்களிடம் இருந்த கைப்பையை வாங்கி சோதனை செய்தபோது அதில் 1965.530 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்கள், 15.140 கிராம் எடையுள்ள வைரக்கற்கள், 248. 200 கிராம் எடையுள்ள வெள்ளி ஆபரணங்கள் ஆகியவை இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோயம்புத்தூரில் நடைபெற்ற வழிப்பறி கொள்ளையில் கொள்ளையடிக்கப்பட்ட ஆபரணங்கள் அவை என்பது தெரியவந்தது.
போலீசுக்கு பயந்து சமா, அகமது சலீம் ஆகியோர் கொள்ளையடிக்கப்பட்ட ஆபரணங்களுடன் ஊர் ஊராக சுற்றி வந்ததும் தெரியவந்தது என்றும்,பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்களின் மதிப்பு சுமார் 60 லட்சம் ரூபாய் என திருப்பதி குற்றப்பிரிவு காவல் நிலைய டிஎஸ்பி ரவிசங்கர் ரெட்டி தெரிவித்தார்.