![Two-wheelers parked in front of shop on fire ... Police searching for mysterious person!](http://image.nakkheeran.in/cdn/farfuture/JwtcCAlbnDYv6AiIgdTNRJdlxoeziiSGQmaN35wVJjk/1654484248/sites/default/files/inline-images/b4_6.jpg)
டூவீலர்கள் பழுது பார்க்கும் கடை முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ளது தேர்வழி கிராமம். இந்த கிராமத்தில் குமார் என்பவர் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை மற்றும் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் கடையின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 இருசக்கர வாகனங்கள் திடீரென தீ பற்றி எரிந்தது. அதிகாலை அந்த வழியாக வந்த சிலர் இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிவதை கடை உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குமார், தீயணைப்புத் துறையினருக்கு தகவலளித்த நிலையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரத்தில் தீயை அணைத்தனர். அதன் பிறகு கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தபோது, அதில் மர்ம நபர் ஒருவர் கடைக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தது பதிவாகி இருந்தது. அந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு வழக்குப்பதிவு செய்துள்ள கும்மிடிப்பூண்டி போலீசார் அந்த மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.