சேலத்தில் தொடர் திருட்டு, வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டு வந்த இரண்டு ரவுடிகளை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் அஸ்தம்பட்டி மணக்காட்டைச் சேர்ந்தவர் பாசில். இவர், கடந்த ஏப். 27 ஆம் தேதி செவ்வாய்பேட்டைக்கு வேலைக்குச் செல்வதற்காக வெங்கடப்பன் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் அவரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 850 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில், செவ்வாய்பேட்டை காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், வழிப்பறியில் ஈடுபட்டது தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கலப்பம்பாடியைச் சேர்ந்த காமராஜ் மகன் மாதேஷ் (30), இதே பகுதியைச் சேர்ந்த மாதப்பன் மகன் மஞ்சு (33) ஆகியோர்தான் என்பது தெரிய வந்தது. சம்பவம் நடந்த அன்றே காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணையில், இவர்கள் மீது சூரமங்கலம், செவ்வாய்பேட்டை காவல் நிலையங்களில் ஏற்கனவே மோட்டார் சைக்கிள் திருட்டு, கோயிலில் நகைகள் திருட்டு, அலைப்பேசி திருட்டு குற்றங்களுக்காக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததோடு, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்ததால் அவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாநகர காவல்துறை துணை ஆணையர் லாவண்யா பரிந்துரை செய்தார். அதன் பேரில், சேலம் மாநகர காவல்துறை ஆணையர் விஜயகுமாரி, அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து மாதேஷ், மஞ்சு ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் குண்டர் சட்ட கைது ஆணை நேரில் வழங்கப்பட்டது.