Skip to main content

“தமிழ்நாடு சொல் அல்ல தமிழரின் உயிர்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 18/07/2023 | Edited on 18/07/2023

 

Tamil Nadu Life of a Tamil is not a word Chief Minister M.K.Stalin

 

மெட்ராஸ் மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் தேதி, தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களில் "தமிழ்நாடு நாள்" குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. இப்பேரணியில் மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு குறித்த சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக பதாகைகளை ஏந்திச் செல்ல உள்ளனர். அதேபோன்று "தமிழ்நாடு நாள்" முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினரும் அறியும் வகையில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இச்சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள்,  ஆட்சியர்கள் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

 

சென்னை, மாநிலக் கல்லூரியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அமைச்சர்கள் கலந்து கொண்டு தமிழ்த்தாய் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர். மேலும் தமிழ்நாடு நாள் கருத்தரங்கில் "வளர்க தமிழ்நாடு" எனும் தலைப்பில் சுப.வீரபாண்டியனும்,  "வாழ்க தமிழ்நாடு" எனும் தலைப்பில் முனைவர் மா.ராசேந்திரனும், "எழுக தமிழ்நாடு" எனும் தலைப்பில் ஆழி செந்தில்நாதனும் உரையாற்ற உள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த சிறப்புகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெற உள்ளது.

 

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில், “தமிழ்நாடு சொல் அல்ல தமிழரின் உயிர். பரந்து விரிந்த நமது இந்தியத் துணைக்கண்டத்துக்கு அழகு சேர்ப்பது, இங்குள்ள பன்முகத்தன்மையே. 1956 நவம்பர் 1 அன்று மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிரிந்து சென்று புதிய மாநிலங்கள் தோன்றின. ஆனால், நம் தாய் நிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் பெற இன்னும் பதினொரு ஆண்டுகள் காக்க வேண்டியதாயிற்று. 1967-இல் இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சியான தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. தமிழ் நிலத்தின் பெருமகன் - தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானார். 1967 ஜூலை 18-இல் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டினோம். மறைமலை அடிகள், தந்தை பெரியார், சோமசுந்தர பாரதியார், சங்கரலிங்கனார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி என இந்தப் போராட்டத்தின் வேர் மிக ஆழமானது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தமிழ்நாடு நாளில், தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிடப் பாடுபட உறுதியேற்போம். தனித்துவமிக்க தமிழ்நாட்டின் ஒளி இந்தியா முழுதும் பரவட்டும். தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க” என தமிழ்நாடு  நாள் குறித்த தனது வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்