வேலூர் மாவட்டத்தை நிர்வாக காரணங்களுக்காக மூன்றாக பிரிப்பதாக சுந்திர தினவிழாவில் அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி.
![two more districts created from vellore district](http://image.nakkheeran.in/cdn/farfuture/EecTWwzdvrIpyt2qukoMVUSPpdQz_FP0PLhbhIzW-R4/1565862832/sites/default/files/inline-images/epsss.jpg)
வேலூர் மாவட்டம் என்பது தமிழகத்தில் உள்ள பெரிய மாவட்டங்களில் ஒன்று. இதனை பிரிக்க வேண்டும் என்பது கடந்த 30 ஆண்டு கால கோரிக்கை. இந்த கோரிக்கை நிறைவேறாமலே இருந்து வந்தது. திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டமும், அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம் என மூன்றாக பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துவந்தது. இதற்காக சில கட்சிகளும், பல அமைப்புகளும் போராட்டமும் நடத்திவந்தன.
இந்நிலையில் 2019 ஆகஸ்ட் 15ந்தேதி, சுந்திர தின உரையாற்றிய எடப்பாடி.பழனிச்சாமி, நிர்வாக காரணங்களுக்காக வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகிறது என அறிவித்துள்ளார்.
நீண்ட கால கோரிக்கை திடீரென செயல்பாட்டுக்கு வந்ததுயெப்படி என விசாரித்தபோது, வேலூர் மாவட்டம் என்பது பல வருடங்களாகவே திமுகவின் கோட்டையாகவே இருந்து வந்தன. கடந்த இரண்டு தேர்தலாக அது அதிமுகவின் கோட்டையாக மாறிவந்தது. இந்நிலையில் தற்போது அது மீண்டும் திமுகவின் கோட்டையாக மாறுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் குடியாத்தம், ஆம்பூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்றது, வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் திமுக கதிர்ஆனந்த் வெற்றி பெற்றார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் அதிமுக அதனை தக்கவைத்துக்கொள்வதற்காக மாவட்டத்தை பிரிக்க முடிவு செய்து அதனை அறிவித்துள்ளது.
இதன் மூலமாக மூன்று மாவட்ட மக்களின் மதிப்பை, ஆதரவை பெறலாம் என நினைத்தே இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.