கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது நடு கஞ்சங்கொல்லை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பனின் மகன் மனோபாலா (19) கல்லூரி படித்து வருகிறார். இவர், அதே தெருவைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரது மகளை காதலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கஜேந்திரன் குடும்பத்தினருக்கும் மனோபாலா குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
நேற்று முன்தினம் கஜேந்திரன் வீட்டு வழியாக மனோபாலா சென்றுள்ளார். அப்போது, கஜேந்திரன் அவரது தம்பி பாலமுருகன் இருவரும் மனோபாலாவை வழிமறித்து எங்கள் வீட்டுப் பெண்ணை நீ எப்படிக் காதலிக்கலாம் எனக் கண்டித்துள்ளனர். இதனால் அங்கு இருவருக்குமிடையே வாய் தகராறு நடந்துள்ளது. இந்தத் தகவல் அறிந்த மனோபாலாவின் அண்ணன் மனோராஜ், அவரது உறவினர் செல்வம், அவரது மகன் விக்னேஷ், சித்ரா ஆகியோர் ஒரு கோஷ்டியாகவும், கஜேந்திரன் அவரது தம்பி பாலமுருகன், நவீன், லதா மற்றும் அவரது உறவினர் நவீன் ஆகியோர் மற்றொரு கோஷ்டியாகவும் எதிரெதிராக வந்து மோதிக் கொண்டனர்.
இந்த மோதலில் மனோபாலா, கஜேந்திரன் ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் இருவரையும் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இந்த மோதல் சம்பவம் குறித்து இரு தரப்பினரும் போலீஸில் அளித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் பாலமுருகன், கஜேந்திரன், நவீன், லதா, செல்வம், மனோராஜ், விக்னேஷ், சித்ரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களைக் கைது செய்வதற்காக போலீசார் அவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.