விழுப்புரம் மாவட்டத்தில் பார்ட்னர்ஷிப் முறையில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்வதாகக் கூறி 26 பேரிடம் இரண்டரை கோடி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட நாவர்குளம் பள்ளி ஆசிரியர் ராமசாமி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராமசாமி அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியில் இருந்து அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா உத்தரவிட்டுள்ளார்.
அதை அடுத்து கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி கட்டிடம் இடிப்பது சம்பந்தமாக அதில் செயல்பட்டு வந்த ஆய்வுக்கூடத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்தபோது அங்கிருந்த ஆசிட் பாட்டில் தவறி விழுந்து 4 மாணவிகள் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜாராமன் அலட்சியமாகச் செயல்பட்டதால் தான் மாணவிகளுக்கு ஆசிட் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இந்த காரணத்திற்காக தலைமையாசிரியர் ராஜாராமனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா.