கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகில் உள்ள பீலமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன்(29). ஆட்டோ டிரைவரான இவருக்கும் தியாகதுருகம் அருகே உள்ள வட தெரசாசாலூர் பகுதியைச் சேர்ந்த சரண்யா(23) என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மூன்று வயதில் யாழினி என்ற மகளும், ஒரு வயதில் சாஜித் என்ற மகனும் இருந்தனர்.
தேவேந்திரன் - சரண்யா இருவருக்கும் இடையே குடும்பப் பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில், பொங்கலை முன்னிட்டு குடும்பத்திற்கு என்னென்ன வாங்க வேண்டும் என்பது குறித்து பேசும்போது கணவன் மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு எழுந்துள்ளது. இதனால் கணவர் மீது கோபித்துக் கொண்ட சரண்யா, நேற்று முன்தினம் தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்பொழுது சரண்யாவின் பெற்றோர் கடைக்கு சென்றுவிட்டதால், அவரது பாட்டின் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அவரும், சரண்யா வந்ததும், அவர் குழந்தைகளுக்கு பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். பிறகு பால் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது சரண்யாவையும் குழந்தைகளையும் காணவில்லை. பயந்துபோன சரண்யாவின் பாட்டி அவர்களை குறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார். ஆனால், யாரும் சரண்யாவையும் அவரின் குழந்தைகளையும் பார்க்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
பிறகு உறவினர்களுடன் சேர்ந்து சரண்யாவின் பாட்டி அவர்கள் மூவரையும் தேடியுள்ளார். அப்போது ஏரிக்கரை அருகே உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்த கிணற்றுக்கு வெளியே சரண்யாவின் துப்பட்டா கிடந்துள்ளது. இதை பார்த்து திடுக்கிட்ட ஊர் மக்கள் சரண்யா குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கருதினர். இது குறித்து உடனடியாக தியாகத்திற்கும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் கமலஹாசன், தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயனுக்கு தகவல் கொடுத்து அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிறகு 80 அடி ஆழம் உள்ள கிணற்றில் இருந்த தண்ணீரை முழுமையாக மின் மோட்டார் உதவியுடன் வெளியேற்றினர். அப்போது சரண்யாவின் இரு குழந்தைகளும் சடலமாக கிடந்தனர். ஆனால், சரண்யா அங்கு இல்லை.
உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சரண்யாவை தேடினர். அப்போது வட தெரசாலூர் அருகே உள்ள ஏரி பகுதியில் சரண்யா மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்று அவரை மீட்டு அவரிடம் விசாரித்த போது கணவருக்கும் அவருக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக மனம் வெறுத்து தற்கொலை முடிவு எடுத்ததாகவும், முதலில் குழந்தைகள் இருவரையும் தூக்கி வீசியதாகவும் பிறகு அவர் கிணற்றில் குதித்ததாகவும் சொல்லியுள்ளார். மேலும், தனக்கு நீச்சல் தெரிந்ததால், மேலே வந்துவிட்டதாகவும், பிறகு, வட தெரசாலூர் பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக ஏறியதாகவும் அப்போது ஏற்பட்ட மயக்கத்தில் அங்கிருந்து கீழே விழுந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
உடனடியாக சரண்யாவை மீட்ட போலீசார் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி, அங்கு அவருக்கு சிகிச்சையில் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வடதரசாலூர் கிராம நிர்வாக அலுவலர் சலீம் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கமலஹாசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.