ஈரோடு ரங்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜவுளி வியாபாரி ராமலிங்கம். இவருக்கு 15 மற்றும் 6 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இந்தச் சிறுவர்கள் இருவரும் நேற்று (12.04.2021) தங்களது தாத்தா மற்றும் பாட்டி ஆகியோருடன் ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து அவர்கள், “எங்களது தந்தை ராமலிங்கம், இந்துமதி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். எங்களது தாய் ரஞ்சிதா, தந்தை மற்றும் அவரது இரண்டாவது மனைவி இந்துமதி ஆகிய மூவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். அது மட்டுமில்லாமல், எங்கள் தாய் ரஞ்சிதா, தனலட்சுமி என்ற பெண்ணை ஓர்பாலின திருமணம் செய்துகொண்டார். இவர்கள் எல்லோரும் சேர்ந்து எங்களைக் கொடுமைப்படுத்தி வருகிறார்கள்” என அச்சிறுவர்கள் தெரிவித்தனர்.
மேலும், “எங்களைப் படிக்க விடாமல், வீட்டு வேலைகளை செய்ய வைக்கிறார்கள். குறிப்பிட்ட நேரத்தில் வேலைகளை செய்து முடிக்காவிட்டால் பாத்ரூம் கழுவும் கிருமிநாசினியைக் குடிக்க வைப்பது, மிளகாய் பொடி கலந்த சாப்பாட்டை சாப்பிட வைப்பது, பாத்ரூமிலேயே தூங்க வைப்பது போன்ற கொடுமைகளை செய்கின்றனர்.
தாய் ரஞ்சிதா சக்தியாகவும், அவர் திருமணம் செய்துள்ள அவரது தோழி தனலட்சுமி சிவனாகவும் கூறி எங்களை மிரட்டுவதோடு, எங்கள் இருவரையும் நரபலி கொடுக்கப்போவதாகவும் பயமுறுத்துகிறார்கள். இதனால் நாங்கள் உயிருக்குப் பயந்து தாத்தா வீட்டில் உள்ளோம்” என மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்துள்ளனர்.
தங்களது தாய் ரஞ்சிதா, தோழி தனலட்சுமியை திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தையும் காட்டியுள்ளனர். காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்.