புரட்சி நாயகன் என்ற பட்டத்தை தமிழர்கள் உணர்வுபூர்வமாக வழங்கியது, ஃபிடல்காஸ்ட்ரோவுக்குத்தான். புரட்சித் தளபதி என்று சில நேரங்களில் அழைக்கப்பட்டாலும், புரட்சி நாயகன் என்ற பட்டமும் நடிகர் விஷாலை அலங்கரித்தது. அந்தப் புரட்சி நாயகன் பட்டம், அரசியல் வாரிசு ஒருவருக்கு அக்கட்சியின் தொண்டர்களால் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
பட்டம் படாதபாடு படுவது இருக்கட்டும். விஷயத்துக்கு வருவோம்!
கடந்த 15-ஆம் தேதி சென்னை நந்தனத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் மதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடந்தது. அந்த நேரத்தில், விதிமுறைகளை மீறி பதாதைகள் வைத்ததாக மாநகராட்சி செயற்பொறியாளர் வரதராஜன் உள்ளிட்ட ஊழியர்கள் அவற்றை அகற்றினார்கள். அப்போது மதிமுக தொண்டர்கள் வாக்குவாதம் செய்தனர். இது விவகாரமாகி, செயற்பொறியாளர் தரப்பில், தங்களைத் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது.
அந்த வழக்கில், தென்சென்னை மதிமுக மாவட்ட செயலாளர் சைதை சுப்பிரமணி, தென்சென்னை மாவட்ட துணை செயலாளர் கராத்தேபாபு, வடசென்னை மாணவரணி அமைப்பாளர் அவென்ஜர் ஜெய், மாணவரணி துணைச் செயலாளர் முகவை இரா.சங்கர், வட்டச் செயலாளர் அய்யப்பன் தாங்கல் சீனு ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
“மதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டிருக்கிறார்கள்..” என்று கண்டனம் தெரிவித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, “கட்அவுட்டோ, பேனரோ கூடாது, என் புகைப்படம் வைக்கக்கூடாது என்று முதன் முதலில் அறிவித்தவன் நான். ம.தி.மு.க. மாநாட்டிற்கு கொடி கட்டியதால் தொண்டர்களுக்கும் மாநகராட்சி ஊழியர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை விலக்கி விட மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் சென்றார். அவர் மீது 307-வது பிரிவில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஈ, எறும்புக்குக்கூட தீங்கு செய்யக்கூடாது என்று நினைப்பவன் நான். கொடி மரங்கள் கட்டியபோது ஏற்பட்ட கைகலப்பில் காயம் அடைந்த மாநகராட்சி ஊழியருக்காக வருந்துகிறேன். மாநகராட்சி ஊழியர்கள் எங்களுக்கு விரோதிகள் அல்ல.” என்று கூறியிருந்தார்.
மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி வைகோ ஓய்வு எடுத்துவரும் நிலையில், புழல் சிறையில் அடைபட்டிருக்கும் மா.செ. சைதை ப.சுப்பிரமணியின் வீட்டுக்கும், கைது செய்யப்பட்ட மற்ற நிர்வாகிகளின் வீடுகளுக்கும் சென்ற துரை வைகோ, அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். அதற்காக, துரை வைகோவுக்கு நன்றி தெரிவித்து புரட்சி நாயகன் பட்டத்தை வழங்கியிருக்கிறது விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் மதிமுக மேற்கு ஒன்றியம்.
இரண்டு மாதங்களுக்கு முன், இதே ராஜபாளையம் மதிமுக மேற்கு ஒன்றியம்தான், தமிழர் நலனுக்காகவும், கழகத்தின் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும் துரை வைகோவுக்கு கட்சியில் பதவி வழங்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது
சினிமா தொடங்கி அரசியல் வரையிலும் தமிழகத்தில் ‘புரட்சிகள்’ ஓய்வதில்லை!