மத்திய அரசு பெரும்பாலான ஊர்களில் ரயில்வே பாதையில் குறுக்கே செல்லும் சாலைகளை அமைத்து அவ்வப்போது ரயில்கள் செல்லும்போது மூடுவதற்கும் திறந்து விடுவதற்கும் ஆட்களை நியமித்து அதன்படி பணிசெய்துவந்தனர். கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகம் அமைக்கப்பட்டிருந்த பகுதிகளில் அதை மூடிவிட்டு, ரயில்வே பாதைக்கு சிறிய சுரங்கப்பாதை ஏற்படுத்தி அதன் வழியே போக்குவரத்துக்கு வழி செய்துள்ளது. ஆனால் அப்படி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான இடங்களில் மழை தண்ணீர் தேங்கி பல மாதங்கள் போக்குவரத்து இல்லாமல் பல கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.
பல கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு தங்கள் பணிகளுக்காக நகரங்களுக்குச் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதைவிடக் கொடுமை அந்த சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழை தண்ணீரில் மூழ்கி இரு சிறுவர்கள் இறந்துபோன சோகம் நிகழ்ந்துள்ளது. விழுப்புரம் அருகே உள்ளது சேர்ந்தனூர் வெள்ளக்குளம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் விக்னேஷ் (8), சந்திரமூர்த்தி என்பவரது மகன் தர்ஷன் (6) ஆகிய இருவரும் அங்கு உள்ள பள்ளியில் படித்துவருகின்றனர். நேற்று முன்தினம் (12.12.2021) மாலை சிறுவர்கள் இருவரும் சைக்கிள் ஓட்டிக்கொண்டு அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது அவர்கள் ஊருக்கு அருகே இருந்த ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரில் இறங்கி அதைக் கடந்து செல்லும்போது அதில் மூழ்கியுள்ளனர். வெகுநேரமாகியும் சிறுவர்களைக் காணாததால் அவரது பெற்றோர்கள் தேடியுள்ளனர். அப்போது அந்தக் கோட்டை அருகே அவர்கள் ஓட்டிச் சென்ற சைக்கிள் கிடைத்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், சுரங்கப்பாதை குட்டையில் இறங்கி தேடியபோது இரு சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கி கிடந்துள்ளனர். அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து சிறுவர்களது உடல்களை முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ரயில்வே நிர்வாகத்தின் சரியான திட்டமிடல் இல்லாததால் ரயில்வே கேட் உள்ள இடங்களில் சுரங்கப்பாதை அமைத்து, மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து முடக்கப்படுகின்றன. இப்போது அந்தத் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதற்கு முறையான தீர்வு காண ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.