ஒன்பதுமாத காலமாக சம்பளம் வழங்காத சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் உண்ணாவிரத போராட்டம் இருந்த சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 2 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவிடைமருதூர் தாலுக்கா கோட்டூர் அம்பிகா சர்க்கரை ஆலை இயங்கிவருகிறது அங்கு பணிபுரியும்தொழிலாளர்களுக்கு 9 மாதமாக சம்பளம் வழங்க்கப்படவில்லை. சம்பளம் தராததை கண்டித்து கொட்டும் மழையிலும் இரண்டாவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
நேற்று ஆலை நிர்வாகத்துடன் கும்பகோணம் சப் கலெக்டர் பிரதீப்குமார் திருவிடைமருதூர் தாசில்தார் ராஜேஸ்வரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் ஆலை நிர்வாகம் செவிசாய்க்கவில்லை.
இந்தநிலையில் தொடர்உண்ணாவிரதம் இருந்து வந்த தொழிலாளர்கள் ஐயப்பன் , மதியழகன் இருவரும் மயங்கி விழுந்தனர். இருவரையும் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒருகாலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் மிகப்பெரும் பணக்காரராக இருந்தவர் தியாகராஜமுதலியார். அவரது சொந்த ஊரான வடபாதிமங்கலத்தில் திருஆரூரான் என்கிற பெயரில் சர்க்கரை ஆலை ஒன்றை உருவாக்கினார். அதுவே ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் முதல் ஆலையாக துவங்கப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகள் கரும்புகளை வடபாதிமங்கலம் ஆலைக்கே அனுப்பினர். கரும்பு உற்பத்தியும் அதிகரித்து, அந்த ஆலையை தொடரந்து தஞ்சை மாவட்டம், திருமண்டங்குடி, கோட்டூர், கொல்லுமாங்குடி, சித்தேர், என ஆறு சர்க்கரை ஆலைகளை உருவாக்கினர்.
தியாகராஜமுதலியாருக்கு மூன்று மகன்கள் அதில் இரண்டாவது மகனே ஆலைகளை நிர்வகித்து வருகின்றார். கரும்பு உற்பத்தி குறைவு, ஊழல், உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் படிப்படியாக அவர்களுக்கு சொந்தமான ஆலைகள் மூடப்பட்டுவருகின்றன. கோட்டூர், திருமண்டங்குடி ஆலை கரும்பு விவசாயிகளுக்கு கரும்புக்கான பணம் வழங்காமல் போனதால், விவசாயிகளின் தொடர் போராட்டதால், இரண்டு ஆலைகளின் குடோனுக்கும் மாவட்ட நிர்வாகம் சீல்வைத்தது.
இந்தநிலையில் திருமண்டங்குடி, கோட்டூர் ஆலை ஊழியர்களுக்கு ஆறுமாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஆலை 800 கோடி கடனில் இயங்குவதாக கூறுகின்றனர்.