'முத்து நகரம்' என வரலாற்றில் போற்றப்படும் ஊரான தூத்துக்குடியில் மீண்டும் முத்து வளர்க்க முதன் முறையாக 5 லட்சம் முத்துச்சிப்பிகள் கடலில் விடப்பட்டுள்ளது.
வரலாற்றிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது தூத்துக்குடி முத்து. இதன் காரணமாக தூத்துக்குடி 'முத்து நகர்' என்று அழைக்கப்பட்டது. அதேபோல் முத்துக்குளித்தல்என்பதும் தூத்துக்குடியின் பிரதான தொழில்களில் ஒன்றாக இருந்தது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்கள் அழிந்ததால் முத்துக்குளித்தலும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தூத்துக்குடியை முத்து நகரமாக மாற்றும் முயற்சியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் முதல் கட்டமாக முத்துச் சிப்பிகளை கடலில் விடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
முதற்கட்டமாக 5 லட்சம் முத்துச்சிப்பிகள் தூத்துக்குடி மற்றும் வேம்பார் ஆகிய இரண்டு பகுதிகளில், கடல் பகுதியிலிருந்து சுமார் இரண்டு மைல் கடல் தொலைவில் கடலின் அடிப்பகுதியில் விடப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ''மத்திய கடல்வாழ் மீன் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த அறிவியலாளர் ஆஷா இந்த முயற்சியை எடுத்துள்ளார். இன்றைய தினம் ஐந்து லட்சம் முத்துச்சிப்பிகளை கடலில் விட்டிருக்கிறோம். கடலில் விடப்பட்ட இந்த முத்துச்சிப்பிகள் ஓராண்டில் முத்தாக உருவாகும்'' என்றார்.