
அதிமுக அரசில் கொங்கு மண்டலம் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேட்டூர் உபரிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீர்வழித் திட்டங்களை நிறைவேற்றாத அதிமுக அரசைக் கண்டித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சேலத்தில் இன்று (அக்டோபர் 12, 2018) ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தின்போது அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியது:
கொங்கு மண்டல வளர்ச்சிக்காக நாங்கள் இந்த அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். குறிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனை, மத்திய பல்கலைக்கழகம் ஆகியவற்றை கொங்கு மண்டலத்தில் கொண்டு வர வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தினோம். இக்கோரிக்கைகள் மீது அதிமுக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேட்டூர் உபரிநீர் திட்டம், தோணி மடுவு திட்டத்தை நிறைவேற்றுவதாக கடந்த 2012ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையிலேயே சொல்லப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகள் ஆகியும் இதுவரை இத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. நீர்நிலைகளை பாதுகாப்பதிலும், நதிகளை இணைப்பதிலும் இந்த அரசு அக்கறை காட்டவில்லை. அதிமுக ஆட்சியில் கொங்கு மண்டலம் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
திருமணி முத்தாறு & கோரையாற்றை இணைத்திட வேண்டும். மேலும், கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் இணைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஈஸ்வரன் கூறினார். கட்சியினர், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.