கரோனா ஊரடங்கு உத்தரவு பிப்ரவரி 28ஆம் தேதி வரை நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் வரை வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வந்து 14கி.மீ நடந்து கிரிவலம் வருவார்கள். அன்றைய தினம் சாலை மற்றும் நகரத்தில் பெரியளவில் மக்கள் நெருக்கடியிருக்கும். தற்போது மீண்டும் ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநிலத்திலும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் திருவண்ணாமலை கிரிவலம் இந்த பிப்ரவரி மாதம் தடை செய்யப்பட்டுள்ளது.
மாசி மாதத்தில் வரும் இந்த பௌர்மணி, பிப்வரி 26 ஆம் தேதி மாலை 3 மணிக்கு தொடங்கி 27 ஆம் தேதி மாலை 2.42க்கு முடிகிறது. இதனால் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு தினங்கள் கிரிவலம் வர மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திப் நந்தூரி தடை விதித்துள்ளார். தொடர்ச்சியாக 12வது மாதமாக கிரிவலம் வர பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் கிரிவலம் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனை மீறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவில் கிரிவலம் வந்தனர். அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீஸார், அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால், காவல் துறையினருக்கும் – பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நள்ளிரவில் கோவிலுக்கு வந்த இந்து அமைப்பினர் சிலர் சாலை மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் இந்த மாதம் காவல்துறை எச்சரிக்கையாக இருக்குமா அல்லது பக்தர்களை கிரிவலம் வர அனுமதிக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.