திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டியில் 1906ஆம் ஆண்டு ஊரின் நடுவே அண்ணா தினசரி மார்க்கெட் அருகே அரசு துவக்கப்பள்ளி ஒன்று துவக்கப்பட்டது. 1 முதல் 5ஆம் வகுப்புவரை என ஆரம்பிக்கப்பட்ட பள்ளி, அதன்பின்பு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 1906ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நூறாண்டு கண்ட பள்ளியின் நிலைமை கவலைக்கிடமாக போகவே, அப்போதைய ஆத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இ. பெரியசாமி முயற்சியால் 2010ஆம் வருடம் இப்பள்ளி நடுநிலைப்பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளிக்காக ஆர்.எம்.எஸ்.ஏ. திட்டம் மூலம் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் சார்பாக ரூ. 48 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, 6 முதல் 10ஆம் வகுப்புவரை மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இப்பள்ளியில், சுமார் 140 மாணவர்கள் பயின்று வந்தனர். அதன்பின்னர் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தவில்லை என்ற காரணத்தினாலும் இப்பள்ளியில் படிக்கும் (அரசுப் பள்ளி) 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சின்னாளபட்டியில் உள்ள தனியார், அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் முறையாக இடம் வழங்காததால் மாணவர்கள் அருகில் உள்ள கிராமங்களான என்.பஞ்சம்பட்டி, செட்டியபட்டி, வீரக்கல் ஆகிய ஊர்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சேர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
சின்னாளபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள், பள்ளியைத் தரம் உயர்த்தினால் தங்களுக்கு இடமாற்றம் (டிரான்ஸ்ஃபர்) ஏற்படும் என்று கருதி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தாமல் இருந்துவந்ததாகவும், பள்ளியில் செயல்பட்டுவந்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தை முடக்கிவைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது 10 வருடங்களுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைந்தவுடன் சின்னாளபட்டி மக்கள் தாங்கள் படித்த அரசுப் பள்ளி தரம் உயரும் என எதிர்பார்த்திருக்கின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் பள்ளியின் தலைமையாசிரியராக பானுரேகா பொறுப்பேற்றபோது பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 72ஆக இருந்துள்ளது. அதன் பின்னர் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் வெளியேறியதால் மாணவர்கள் எண்ணிக்கை 52 ஆனது. பானுரேகா பள்ளியின் பரிதாப நிலையைக் கண்டு பள்ளியில் 6ஆம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன் பின் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துவருகிறது. தற்போது 6ஆம் வகுப்பில் 30 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் பள்ளியின் மொத்த மாணவர் எண்ணிக்கை தற்போது 100ஆக உயர்ந்துள்ளது.
இது சம்மந்தமாக அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை பானுரேகாவிடம் கேட்டபோது, “கிராமங்களில் இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில்கூட 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். 40ஆயிரம் பேர் வசிக்கும் சின்னாளபட்டியில் 72 மாணவர்கள் மட்டுமே படிப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நான், சின்னாளபட்டியில் உள்ள பொதுமக்களிடம் அரசுப் பள்ளியின் பெருமைகள் குறித்து கூறினேன். இதனால், இன்று இப்பள்ளியில் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். அவர்களை ஊக்கப்படுத்த பரிசுத் தொகையாக ரூபாய் ஆயிரம் வழங்கினேன். இதைக் கேள்விபட்ட தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ. பெரியசாமி அந்த செலவை தான் ஏற்றுக்கொண்டதோடு பள்ளியைச் சுற்றி காம்பவுன்ட் சுவர் மற்றும் நுழைவு வாயில் உட்பட அனைத்துப் பணிகளையும் செய்ய உத்தரவிட்டுள்ளார். விரைவில் தனியார் பள்ளிகளைவிட இப்பள்ளி தரம் உயரப்போகிறது” என்றார்.
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சரும், ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான இ. பெரியசாமியின் இந்நடவடிக்கைக்கு சின்னாளபட்டி வட்டார கைத்தறி நெசவாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.