சேலத்தில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக பரப்புரை செய்ததாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது சேலத்தில் பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சேலத்தில் கடந்த வாரம் நான்கு நாள்கள் தங்கியிருந்து மக்கள் சந்திப்பு கூட்டங்களில் பேசினார். அவர் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பரப்புரை செய்ததாக சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, மல்லியக்கரை, தம்மம்பட்டி ஆகிய காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் சேலம் மாநகர பகுதியில் நகரம் மற்றும் அன்னதானப்பட்டி ஆகிய காவல்நிலையங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 20ம் தேதி இரவு தாதகாப்பட்டி பில்லுக்கடை பேருந்து நிறுத்தம் அருகே, தினகரன் பரப்புரை செய்தார். இரவு 11.15 மணியளவில் பேசிய அவர், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில் தினகரன், மாவட்ட செயலாளர்கள் எஸ்.வெங்கடாசலம், எஸ்.கே.செல்வம், கிருஷ்ணமூர்த்தி, கோபால், மோரீஸ் ஆகியோர் மீது அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.வெங்கடாசலம் கூறுகையில், ''பொதுமக்கள், அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் ஆகியோர் எங்களுடன்தான் இருக்கின்றனர். தினகரனுக்கு வரும் கூட்டத்தைப் பார்த்து பொறுக்க முடியாமல்தான் காவல்துறையினர் பொய் வழக்குப்பதிவு செய்கின்றனர். இதை நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம்,'' என்றார்.