பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பள்ளிக் குழந்தைகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்பொழுது ஒரு பள்ளி மாணவியைப் பார்த்து, “எது வேண்டுமானாலும் என்னைக் கேள்” என்றார். அதற்கு அங்கிருந்த குழந்தை, “நீங்கள் எப்படி தெலங்கானாவிற்கு ஆளுநரானீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.
ஆளுநர் தமிழிசை, உன் பெயர் என்ன? என்று மாணவியிடம் கேட்க, அந்த மாணவி, பிரித்திகா என்றார். பின்னர் சிரித்துக் கொண்டே பதிலளித்த ஆளுநர், “மாணவி பிரித்திகா நான் எப்படி தெலங்கானா கவர்னர் ஆனேன் என்று கேட்கிறார்கள். உங்களை மாதிரி ஸ்கூலில் சேர்ந்து படித்து, அன்றைய பாடத்தை அன்றன்றைக்கே நல்லா படித்து, அம்மா, அப்பா சொல்வதைக் கேட்டு, டீச்சர் சொல்வதைக் கேட்டு, மெடிக்கல் காலேஜில் படிக்கும்போது ப்ரொபெஸர் சொல்வதைக் கேட்டு நல்லா படித்து தான் கவர்னர் ஆனேன். ஆகவே, நீங்கள் எல்லோரும் நல்லா படித்தால் டாக்டராக; கவர்னராக ஆகலாம். தலைவராகவும் ஆகலாம்'' என்றார்.