அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவின் தலைமை நாங்கள் தான் என்று சசிகலா, எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடியும் ஒபிஎஸ்ஸும் ஒருவரையொருவர் நீக்குதும், புதிய நிர்வாகிகளை நியமிப்பதும் அன்றாட நிகழ்வாக உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை தெற்கு வடக்காக பிரித்து தெற்கு மா.செ.வாக வைரமுத்துவும், வடக்கு மா.செ.வாக மாஜி விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏவும் உள்ள நிலையில் ஓபிஎஸ் அணியில் புதிய மா.செக்களாக தெற்கு மாஜி அறந்தாங்கி ரத்தினசபாபதி, வடக்கு மா.செ.வாக ராஜசேகரன், கிழக்கு மா.செ.வாக ஞான.கலைச்செல்வன் ஆகியோரை நியமித்துள்ளனர்.
ஓபிஎஸ்ஸால் நியமிக்கப்பட்ட புதிய மா.செக்கள் சனிக்கிழமை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம், அறந்தாங்கி உட்பட பல முக்கிய நகரங்களுக்குச் சென்று கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கினார்கள். தொடர்ந்து அறந்தாங்கியில் பேட்டியளித்த ரத்தினசபாபதி, ''எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு நிரந்தர ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்தான் உள்ளார். தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டது. பிரதமர் மோடி சென்னை வந்தார். நல்ல திட்டத்திற்காக வந்தார். நாங்கள் அவருக்கு உண்மையான தோழமை கட்சியாக இருந்து கொண்டிருக்கிறோம்.
திருமணம் செய்து கொள்வது ஒருவர் இன்னொருவருடன் வாழ நினைப்பது என எடப்பாடியார் போல இல்லாமல் பாஜகவுடன் உண்மையான கூட்டணியாக இருக்கிறோம். கூட்டணி விசுவாசம், தர்மத்தை கடைப்பிடிக்கிறோம். ஆனால் அவர்கள் (எடப்பாடி) வேறு ஒருவருடன் மறைமுக கூட்டணி வைப்பதற்காக கட்சியை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்'' என்றார்.
தொடர்ந்து பேசிய வடக்கு மா.செ ராஜசேகரன், ''தேர்தல் ஆணையம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ்க்கு அழைப்பு கொடுத்துள்ளது. அந்த அழைப்பை ஏற்று கோவை செல்வராஜ் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள, ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் கொடுத்துள்ளார். இதை யாராலும் மறைக்க முடியாது'' என்றார்.