கஞ்சி தொட்டி என்பது வாழ்வதற்கே வழி இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்படும்போது பொதுமக்களுக்காக பொதுமக்களே ஏற்பாடு செய்வதுதான் கஞ்சி தொட்டி. இதை போராட்டக்களமாக மாற்றியிருக்கிறார்கள் திருச்சி மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள். இவர்கள் போராட்டத்தினால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை உண்டாக்கியது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா மான்பிடிமங்களம் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த மணல் குவாரி கடந்த பிப்ரவரி மாதம் திடீரென மூடப்பட்டது. இதனால் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளி வந்த சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மூடப்பட்ட மணல் குவாரியை மீண்டும் திறக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை, பல விதமான போராட்டங்கள் என தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்கிறார்கள். அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு பேச்சு வார்த்தையின் இறுதியிலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திருவெறும்பூர் தாலுகா கீழமுல்லைக்குடியில் மணல் குவாரி திறப்பதாக உறுதி அளித்துக்கொண்டே வந்தனர். ஆனால், குவாரிகள் மட்டும் திறக்கவே இல்லை.
இந்த இடைப்பட்ட கால கட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானது. மேலும் தேர்தல் காலம் என்பதால் திரும்ப மணல் குவாரி திறப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று சொல்லியிருந்தார்கள். .
இந்த நிலையில்தான் வாழ்வாதாரத்திற்கு மாற்று வழி எதுவும் இல்லாத நிலையல் இரண்டு நாட்களுக்கு முன்பு ஜீயபுரம் பகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்களது வீடுகள் மற்றும் மாட்டு வண்டிகளில் கருப்புக்கொடி கட்டி ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அப்போதே பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.
இந்த நிலையில் தீடீரென திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் குடும்பத்துடன் வந்து குவிந்தனர். அவர்கள் ஒரு சரக்கு ஆட்டோவில் சமையல் செய்த சாதத்தை எடுத்து வந்தனர். அந்த சாதத்தை கஞ்சியாக்கி பட்டினியால் வாடும் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு கொடுப்பதற்கான ஏற்பாடு செய்தபோது அந்த இடமே பரபரப்படைந்தது. அதனை தொடர்ந்து தாசில்தார்கள் ராஜவேலு, அண்ணாதுரை ஆகியோர் போராட்டம் நடத்திய தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு திருச்சி மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்க துணை தலைவர் ராமர் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, உள்ளிட்ட தொழிற்சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளை மட்டும் கலெக்டர் சிவராசுவிடம் அழைத்து சென்றனர். மணல் மாட்டு வண்டி தொழிற்சங்க செயலாளர் சேகர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
இதற்கு பிறகு கலெக்டர் கீழ முல்லைக்குடியில் கண்டிப்பாக மணல்குவாரி திறக்க ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதியளித்தார். இதற்கு இடையில் திருச்சியில் தற்போது பல்வேறு இடங்களில் எந்தவித முன் அனுமதியும் இன்றி பல ஆறுகளில் லாரிகள் மூலம் மணல் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். குவாரிகள் எதுவும் திறக்கப்படாத நிலையில் மணல் லாரிகளில் மணல் கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.