
புதிய தலைமைச்செயலக முறைகேடு குறித்த விசாரணை ஆணைய தலைவர் ரகுபதி ராஜினாமா செய்தார். விசாரணை ஆணையம் குறித்து உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ராஜினாமா செய்வதாக ஆகஸ்ட் 13ம் தேதி தலைமை செயலாளருக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி ராஜினாமா கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,
விசாரணை ஆணையம் பற்றி உயர்நீதிமன்றம் கூறிய கருத்து தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. ஓய்வுபெற்ற பிறகு ஏதேனும் பதவியை தேடிச்செல்வதை போல் நீதிபதி சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார். ஆணையங்கள் அரசுக்கு ஆதரவாக அறிக்கை தருவதாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கருத்து கூறியிருந்தார்.
3 ஆண்டுகள் விசாரணை நடைபெறாமல் இருந்ததற்கு ஆணையம் காரணம் அல்ல. உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக்கோரி பலமுறை முறையிட்டேன். முறையீட்டை விசாரிக்காமல் போனதே ஆணையம் செயல்படாமல் போனதற்கு காரணம்.
மவுலிவாக்கம் கட்டிட விபத்தை 45 நாட்களில் விசாரித்து எந்தவித ஊதியமும் பெறாமல் அறிக்கை தாக்கல் செய்தேன். ஆணையத்தில் தொடர்ந்து இருக்க விருப்பம் இல்லாததால் பதவி விலகுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
விசாரணைக்காக தமிழக அரசு தந்த இன்னோவா கார், கனிப்பொறி, விசாரணை ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் ஒப்படைத்துவிட்டேன் என்றும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.