தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்று கடந்த சில வாரங்களாக போக்குவரத்துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஜூன் 3ந் தேதி பள்ளிகள் தொடங்கவுள்ள நிலையில் அதற்குள் வாகனங்கள் ஆய்வு முடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதால் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 1707 பள்ளி வாகனங்கள் உள்ளதாக ஆவணங்கள் கூறுகின்றன. வேலூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய ஆர்.டி.ஓ அலுவலகங்கள் மைதானத்தில் ஆய்வு செய்தனர். இதுவரை 1162 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் 70 வாகனங்களில் பல்வேறு குறைகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பழுதில் உள்ள இந்த வாகனங்கள் சரிசெய்து கொண்டு வரும்வரை அதற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆய்வு செய்யாமல் மீதமுள்ள 545 வாகனங்கள் இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆய்வு செய்து பள்ளி திறப்புக்குள் அனுமதி தரப்படும் என்கிறார்கள் வேலூர் மாவட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள்.
அதிகாரிகள் என்ன தான் பள்ளி, கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்தாலும், அந்த பேருந்து நல்ல நிலையில் இருந்தாலும் ஒரு பேருந்துக்கு ரூ 5 ஆயிரம் என ரேட் பிக்ஸ் செய்து பணம் வசூல் செய்கிறார்கள் என்கிற கோபக்குரலும் பெரும்பாலான இடங்களில் கேட்கிறது.