கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(56). கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ம் தேதி சமயபுரம் அருகே உள்ள அக்கரைபட்டி கிராமத்திற்கு தன்னுடைய சொந்த லாரியில் சரக்குடன் வந்துள்ளார். சரக்குகள் உரிய நபரிடம் கொண்டு சேர்க்கப்பட்ட பிறகு லாரியை சமயபுரம் நால்ரோட்டில் நிறுத்திவிட்டு அப்பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
மீண்டும் தன்னுடைய ஊருக்கு புறப்பட திரும்பி வந்து பார்த்தபோது, லாரி காணாமல் போயிருந்தது. அதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அச்சம்பவம் குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சமயபுரம் போலீசார் லாரியை தேடி வந்தனர்.
இதனிடையே கடந்த வாரத்தில் சிவகங்கை காளையார் கோவிலில் போலி நம்பர் பிளேட்டுகளுடன் இருந்த இரண்டு லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அதில் ஒன்று இரண்டு வருடத்திற்கு முன்பு சமயபுரத்தில் திருடப்பட்ட லாரி என தெரியவந்தது.
விசாரணையில் லாரியை திருடியவர்கள் கோவை மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் இருவரை கைது செய்து விசாரணை செய்தனர். அதில் ஒருவர் காளையார்கோயில் அய்யனார்குளத்தைச் சேர்ந்த ராஜேஷ்(24) மற்றொருவர் இளையான்குடி சொக்கப்படப்பூரைச் சேர்ந்த அன்புமணி(32) என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்தனர்.