வேலைக்கு வெளிநாடு அனுப்புவதாக கூறி ஏமாற்றிய தொகையை திருப்பி கேட்ட பொழுது, கூலிப்படையை ஏவி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியவர் மீது நடவடிக்க வேண்டும் எனக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் இளைஞர்கள் மனு அளித்தனர்.
திருவாரூர் மாவட்டம் ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த விஜயேந்திரன் மற்றும் அவரது மனைவி நிவேதா மற்றும் அவரது தந்தை தனகோபால் ஆகியோர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள இளைஞர்களிடம் கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 15-க்கும் மேற்பட்ட நபர்களிடம் முன்பணமாக ஒரு லட்சம் பணத்தை வசூல் செய்துகொண்டு தலைமறைவாகினர்.
இந்நிலையில் பணம் கொடுத்து பல நாட்களாகியும் வெளிநாடு செல்வதற்கான எந்தவித முகாந்திரமும் ஏற்படாததால், அவரிடம் கேட்டபோது பணத்தை திருப்பி தருவதாகக் கூறி பலமுறை தராமல் ஏமாற்றியிருக்கிறார். தொடர்ந்து வற்புறுத்தியபோது கூலிப்படையிடம் பணம் கொடுத்து காரை ஏற்றி கொலைசெய்து விடுவதாக மிரட்டல் விடுப்பதாக கூறி, பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்த இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி முகாமில் மனுஅளிக்க வந்ததாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.