"சார்.!!! என்னுடைய மனைவியிடம் இன்ஸ்டாகிராமில் பழகிய நபர், என் மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வைத்திருப்பதாகவும், கேட்கும் பணத்தை கொடுக்காவிடில் படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவதாகவும் மிரட்டி வருகின்றார்." என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிமுகப்படுத்திய பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணுக்கு சென்னையிலிருந்து புகார் வர, தீவிர விசாரணை செய்த போலீசார் பொறியியல் பட்டதாரியை கைது செய்துள்ளனர்.
"தங்களுக்கு தெரிந்த தகவல்களை, தங்களின் குறைகளை 9489919722 என்ற பிரத்யேக எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் பதிவிட்டால் போதும். குறைகளும், பிரச்சனைகளும் அன்றன்றே நிவர்த்தி செய்யப்படுமென", ராமநாதபுரம் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளராக தான் பொறுப்பேற்றவுடனே அறிவித்தார் எஸ்.பி.வருண்குமார். பொதுமக்களும் தங்களுடைய குறைகளை வாட்ஸ்அப்பில் பதிவிட குறைகளும் நிவர்த்தி செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில், சென்னை புதுப்பாக்கம் எம்.ஆர்.ராதா சாலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், எஸ்.பி.யின் பிரத்யேக எண்ணைத் தொடர்புக் கொண்டு, "தாங்கள் புதுப்பாக்கம் பகுதியில் வசித்து வருவதாகவும், தன்னுடைய மனைவிக்கு இன்ஸ்டாகிராமில் கணக்கு இருப்பதாகவும், அவருடைய இன்ஸ்டாகிராம் நட்பு வட்டத்தில் Suganya 6829 என்ற கணக்கிலிருந்த நபர், ஹாய், ஹலோவில் ஆரம்பித்து, சாப்பிட்டீங்களா..? என சாட் செய்திருக்கின்றார். அதனை உண்மையான பெண் நட்பு என்று கருதி தன்னுடைய மனைவியும் தன்னுடைய புகைப்படத்தை அந்த கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
நாளடைவில் மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மனைவிக்கே அனுப்பி வைத்து, கேட்கும் பணத்தைக் கொடுக்கவில்லையென்றால் இந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவேன் என மிரட்டி வருகின்றார். பிரச்சனை வேண்டாமென்பதற்காக ரூ.50 ஆயிரம் அவன் சொன்ன அக்கவுண்டில் போட்டுவிட்டேன். ஆனாலும் மீண்டும் பணம் கேட்டு மிரட்டி வருகின்றார்." எனப் புகாரை பதிவு செய்துள்ளார் அவர்.
இப்புகாரைப் பெற்ற மாவட்ட எஸ்.பி.வருண்குமார் இதற்காகத் தனிப்படை அமைத்து விசாரணையைத் துரிதப்படுத்தினார். விசாரணையில், மிரட்டல் விடுத்த நபரின் வங்கிக் கணக்கை ஆராய்ந்ததில் அவன் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் வசித்து வரும் பொறியியல் பட்டதாரி சிவக்குமார் என்பது தெரிய வந்ததையடுத்து அவனைப் பிடித்து விசாரிக்கையில் Suganya 6829 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு தவிர priya_98144, sivakumar 7174 உள்ளிட்ட பெயரில் போலியான கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் ஐந்துக்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பணம் பறித்து வந்தது தெரியவர, பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர் மாவட்ட காவல்துறையினர்.