செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் மாற்றுத்திறனாளி ஒருவரை கோவிலில் வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாற்றுத்திறனாளி என சரவணன் என்பவர் கடந்த சனிக்கிழமை செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூரில் உள்ள அகஸ்தீஸ்வரர் சிவன் கோவிலுக்கு சென்றுள்ளார். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு கோவிலில் பூசாரி அறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் வனஜாவின் மகன் தினேஷ் பாபு மாற்றுத்திறனாளி சரவணனை தாக்கியதோடு சாதியை சொல்லி அவரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். எதற்காக கோவிலுக்கு வருகிறாய் திட்டி உள்ளார். நெஞ்சில் எட்டி உதைத்ததால் கீழே விழுந்த மாற்றுத்திறனாளி சரவணன் எழ முயன்றுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பான காட்சிகள் அனைத்தும் கோவில் வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. கீழே விழுந்த சரவணன் தன்னுடைய வாக்கிங் ஸ்டிக்கை எடுக்க முயன்ற போதும் தினேஷ் பாபு தாக்கியது அங்கே இருப்பவருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
இந்நிலையில் மாற்றுத்திறனாளி சரவணன் கொடுத்த புகாரில் தினேஷ் பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கும் நிலையில் தலைமறைவாக உள்ள தினேஷ் பாபுவை போலீசார் தேடி வருகின்றனர். தனக்கு நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து கண்ணீர் மல்க பேசியுள்ள மாற்றுத்திறனாளி சரவணன்,'' உனக்கெல்லாம் எப்படி குழந்தை பிறந்தது என ஆபாசமாக திட்டி என்னை தாக்கினார். மருத்துவமனையில் கூட சிகிச்சை அளிக்கமாட்டேன் என்கிறார்கள்'' என்றார். கோவில் வளாகத்தில் மாற்றுத்திறனாளி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.