தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றுக்கு இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவாவிற்கு சுற்றுலா சென்றுவிட்டு சொந்த ஊரான திருச்சியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய உதயகுமாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து உதயகுமாருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொற்று பாதிப்பு உறுதி செய்து முடிவுகள் வெளியாகும் முன்பே அவர் உயிரிழந்துள்ளார். இளைஞரின் இறப்பை தொடர்ந்து வெளியான பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.