இளைஞர் ஒருவர், தனது தலையில் காலணியை வைத்துக் கொண்டு கதறும் வீடியோ ஒன்று திருச்சி பகுதியில் வேகமாக பரவி வருகிறது. பெண்களை இனி பலாத்காரம் செய்யமாட்டேன், என்ற கதறலுடன் முதல் வீடியோ வெளியானது. அதைத் தொடர்ந்து, சிறுமி முதல், வயதில் மூத்த பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் செல்பி காட்சிகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளது.

சிறிது நேரத்தில் பின்புறமாக கைகால்கள் கட்டப்பட்டு கீழே கிடந்தபடி அவன் கதறி அழும் வீடியோவும் வந்தது. தலை உள்ளிட்ட பாகங்களில் ரத்தம் வழிந்து, இளைஞன் படுத்திருக்கும் பகுதி எங்கும் ரத்தம் சிதறிக் கிடக்கிறது. அவனை கட்டிப்போட்டு தாக்கும் ஒரு குரல் மட்டும் கடுமையாக எச்சரித்து கொண்டிக்கிறது. சிறிது நேரத்தில் அந்த இளைஞனின் தலையை அறுத்துக் கொல்லப் போவதாக கூறப்படும் வீடியோவில், அவ்வாறு செய்ய வேண்டாம் என்ற மூதாட்டி ஒருவரின் குரலும் இயல்பாக கேட்கிறது.
போலீஸ் விசாரணையில், வீடியோவில் கதறும் இளைஞர் திருச்சி பீமநகரை சேர்ந்த மணி என்பதும், தற்போது அவனுடைய நிலை என்ன என்பதும் தெரியவில்லை. தாம் பாலக்கரை காவல் நிலையத்தில் இருப்பதாக அந்த இளைஞன் கூறிய நிலையில், அது காவல் நிலையமே இல்லை, அது சார்ந்து எந்தப் புகாரும் தங்களுக்கு வரவில்லை என பாலக்கரை காவல் நிலைய போலீசார் கூறியுள்ளனர்.

தற்போது அவர் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவரது போன் நம்பரையும் வாங்கி உள்ளனர். வீடியோவில் உள்ள காட்சிகள் குறித்து விசாரிப்பதற்காக திருச்சிக்கு வர வேண்டும் என்று அழைத்துள்ளனர். அவரும் விசாரணைக்கு வருவதாக தெரிவித்துள்ளார். அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரையும் விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்துள்ளனர்.
கடந்த 2 நாட்களாக இருதரப்பினரின் வருகைக்காக போலீசார் காத்திருக்கின்றனர். நேரடியாக விசாரணை நடத்தும் போதுதான் நடந்த உண்மை என்ன, உண்மையிலேயே அந்த வாலிபர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தாரா என்ற விவரம் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பரவ விட்டது யார் என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த இளைஞரின் சித்தி வீடு திருச்சியில் உள்ளதாகவும், அங்கு தங்கி வேலை பார்த்த போது அப்பகுதியை சேர்ந்த ஒரு மாணவியுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதில் அந்த மாணவியுடன் ஊர்சுற்றி புகைப்படம் எடுத்தது பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்ததும், அந்த மாணவிக்கு அவசரஅவசரமாக உறவினர் ஒருவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனாலும் அந்த மாணவியை தொடர்பு கொண்டு மிரட்டி பேஸ்புக்கில் படத்தை வெளியிட்டுள்ளான்.
இதனால் அந்த மாணவியின் குடும்பத்தினர் வேதனை அடைந்து, அவனை எப்படி அடித்து உதைத்து இனியும் இப்படி செய்யாமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அந்த இளைஞரை வீட்டிற்கு வரவழைத்த குடும்பத்தினர் கட்டிவைத்து தாக்கி விரட்டியுள்ளனர் என்று தகவல்.