தமிழகத்தில் பெரும்பாலான காவல்நிலையங்களில், பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய டூ-வீலர்களின் மீதான வழக்குகள் முடிக்கப்படாத நிலையில் உள்ளன. அதேபோல, திருச்சி வாத்தலை பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 36 டூ-வீலர்களின் உதிரிபாகங்கள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக திருடப்பட்டு வந்துள்ளது.
இந்த உதிரி பாகங்கள் அனைத்தையும் திருடிய 2 நபர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல் துறை அதிரடியாக சோதனை நடத்தினார்கள். திருடப்பட்டிருந்த அனைத்து வாகனங்களின் உதிரி பாகங்களையும் மீண்டும் காவல் நிலையத்தில் உள்ள வாகனங்களில் பொறுத்தச் சொல்லி திருடிய இரண்டு திருடர்களையும் வழக்குப்பதிவு செய்யாமல் வாத்தலை காவல் ஆய்வாளர் மணிவண்ணன் அவர்களை தப்பிக்கவைத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து விசாரித்ததில் காவல் ஆய்வாளர் கைதுசெய்த ரஜினி மற்றும் முருகன் இருவரும் இதுபோன்று தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர்களுக்கு உறுதுணையாகக் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் செயல்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், அவர்களிடம் தலா 20 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, தப்பித்துச் செல்லவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வாத்தலை காவல்நிலையத்தில் திருடர்களை தப்பிவிட்ட விவகாரத்தில் ஆய்வாளர், எஸ்.ஐ. இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் மணிவண்ணன், எஸ்.ஐ.செல்லப்பாவை ஆயுதப்படைக்கு மாற்றி திருச்சி எஸ்.பி. உத்தரவிட்டார்.