திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் கருப்புப் பட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்து, கரோனா நிவாரணப் பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரி தனசேகர் இறந்த கூலித் தொழிலாளியின் குடும்பத்திற்கு இறப்புச் சான்றிதழை உடனே வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டி திருவெறும்பூர் தாசில்தார் அவருக்குப் பணி விடுப்பு வழங்கினார். மேலும் திருச்சி ஆர்.டி.ஓ. அவரை வேறு இடத்திற்குப் பணி மாற்றம் செய்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் கருப்புப் பட்டை அணிந்து எதிர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக முன்னேற்றம் சங்கத்தினர் கூறுகையில், "21 நாட்கள் என விதிகள் உள்ள நிலையில் இறப்பினை பதிவு செய்யாத கிராம நிர்வாக அலுவலருக்கு வட்டாச்சியர் வழங்கிய பணிவிடுப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து வருவாய் கோட்டாச்சியர் வழங்கிய வேறு கிராமத்திற்குப் பணிமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.
திருச்சி கிழக்கு, மேற்கு, லால்குடி, மண்ணச்சநல்லூர், உள்ளிட்ட 11 தாலுகா அலுவலங்களிலும் உள்ள 450 கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் அங்காங்கே சமூக இடைவெளியிட்டு நின்று தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
கிராம நிர்வாக அதிகாரிகளின் இந்தக் கருப்புப் பட்டை போராட்டம் மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.