திருச்சியில் குழந்தைகள் விற்பனை தொடர்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு "குழந்தை விற்பனை இப்படித்தான் நடக்கிறதா?- அதிர்ச்சியை ஏற்படுத்தும் குழந்தை விற்பனை" என்ற தலைப்பில் நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
திருச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை குறித்து குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சியில் சட்ட விரோதமாக 2 ஆண் குழந்தைகளை விற்றதாக 6 பெண்கள் உட்பட 8 பேர் திருவெறும்பூர் போலீசார் கைது செய்ததோடு தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காமராஜர் தெருவை சேர்ந்த தம்பதிகள் கோவிந்தன்- அஸ்வினிக்கு ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிறந்து 102 தினங்களே ஆன ஆண் குழந்தையை வளர்த்து வந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு போனில் தொடர்பு கொண்ட ஒருவர் அஸ்வினி சட்டவிரோதமாக ஒரு குழந்தையை வளர்ப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அஜிம் தலைமையிலான குழந்தைகள் தடுப்பு பிரிவு போலீசார் அஸ்வினி விட்டிற்கு வந்து விசாரனை செய்தப் போது அஸ்வினி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். பின்னர் கடந்த 3- ஆம் தேதி திருவெறும்பூர் போலீசாருடன் சென்ற குழந்தைகள் தடுப்பு போலீசார் அஸ்வினியை கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக திருச்சி அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்த திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சி வயல் புதூரை சேர்ந்த வேலம்மாள் (எ) வெண்ணிலா (42) என்பவரையும், அவருக்கு உதவிய சுருளி கோவில் தெருவை சேர்ந்த லூர்து மேரி (55) என்பவரையும் கைது செய்ததோடு அவர்களிடம் குழந்தையை ரூ 82 ஆயிரத்திற்கு விற்ற பெட்டவாய்த்தலை அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் சேர்ந்த புவனேஸ்வரி (42) ஆகிய 5 பேரை கைது செய்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் கோவிந்தன் மட்டும் தலைமறைவாகி உள்ளார்.
இதே போன்று திருவெறும்பூர் அருகே உள்ள பனையக் குறிச்சி விசாலாட்சி நகரை சேர்ந்தவர் தர்மராஜ்(30). இவர் அந்தப் பகுதி வாட்ச் மேன் ஆகவும் அவரது மனைவி ராணி (27) கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு ஏற்கனவே 2 ஆண் குழந்தைகள் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் ராணி கர்ப்பமாக இருந்துள்ளார். ஆனால் கேட்பவர்களிடம் வயிற்றில் கட்டி உள்ளது என்று தனது கர்ப்பத்தை மறைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 13ம் தேதி விசாலாட்சி நகரில் உள்ள வீட்டிலேயே ராணி ஆண் குழந்தையை பெற்றுள்ளார்.
மறுநாள் ராணியை அந்த கட்டிடத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில்சேர்ந்துள்ளார். அப்பொழுது ராணி தனது பெயர் சிவகாமி என்றும் தனது கணவர் பெயர் பாலசுப்பிரமணி என்றும் தான் துறையூர் பகுதியை சேர்ந்தவர் என்றும் தவறான விலாசத்தை கொடுத்துள்ளார்.
பின்னர் மருத்துவமனையில் இருந்து ராணியை மருத்துவர்கள் டிசார்ஜ் செய்வதற்கு முன்பு சொல்லிக்கொள்ளாமல் ராணி மருத்துவமனையை விட்டு வெளியேறி உள்ளார்.
இதனால் திருச்சி மருத்துவமனை அதிகாரிகள் துறையூர் அரசு மருத்துவமனை அதிகாரிகளை தொடர்பு கொண்டு துறையூர் விலாசத்தை கூறியுள்ளனர் அப்போது விசாரணை செய்து பார்த்ததில் அந்த விலாசம் போலி என தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் சுகாதார செவிலியர் ஜெயசுந்தரி, ராணி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ராணியை உடல்நிலை ரொம்ப மோசமாக இருந்தது. மேலும் ஜெயசுந்தரி ராணியிடம் குழந்தை எங்கே கேட்டதோடு கேட்டதற்கு ராணி அக்கா வீட்டில் விட்டுள்ளதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறிய பதிலேயே கூறி உள்ளார்.
பின்னர் ராணியை ஜெயசுந்தரி உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனை சேர்த்துள்ளார்.ஒரு வாரம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையுடன் வெளியேறியது சிவகாமி என்ற பெயரில் வெளியேறியது ராணி தான் என்பது தெரியவருகிறது. அதன் அடிப்படையில் ஜெயசுந்தரி திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுகுமாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் சுகுமார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நிறுவனம் சாரா பாதுகாப்பு அலுவலர் ஜெயசித்ரா தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து திருச்சி மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் இன்ஸ்பெக்டர் அஜிம் ஆகியோர் நேரில் ராணி வீட்டில் விசாரனை செய்தப் போது 13 வருடங்களாக குழந்தைகள் இல்லாத தனது உறவினரான துறையூர் அருகே உள்ள ஆர் புதுப்பெட்டியை சேர்ந்த குமார் (30) சாரதா (27) தம்பதியிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில் ராணியையும், தர்மராஜையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும் துறையூர் ஆர் புதுப்பட்டியைச் சேர்ந்த குமார் மற்றும் சாரதாவை கைது செய்ததோடு அவர்களிடம் ரூபாய் 7 ஆயிரம் பணம் கொடுத்து வாங்கியதை ஒத்துக்கொண்டனர் அதன் அடிப்படையில் அவர்கள் 4 பேரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.
இந்த இரண்டு வழக்குகளிலும் தொடர்புடைய 8 பேரை திருச்சி 6- வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாகியுள்ள கோவிந்தனை திருவெறும்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.