நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நாட்டா பங்கேற்கும் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு திருச்சி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. ஏற்கனவே ஐந்து முறை தமிழகத்திற்கு வந்திருந்த மோடி அண்மையில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், அண்ணா சிலை, தெப்பக்குளம், மார்க்கெட் வழியாக ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்றது. ஆனால் பாஜக திட்டமிட்டுள்ள வழியில் வாகன பேரணிக்கு திருச்சி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
சமயபுரம் கோவில் பூச்சொரிதல் விழாவை காரணம் காட்டி அனுமதி மறுப்பதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர். மேலும் மாற்றுப் பாதையை தேர்ந்தெடுக்குமாறு பாஜகவிற்கு திருச்சி காவல்துறை அறிவுறுத்தியது. அதனைத்தொடர்ந்து காந்தி மார்க்கெட்டில் இருந்து பெரிய கடை வீதி வழியாக மலைக்கோட்டை வரை ரோடு ஷோ நடத்த திருச்சி மாநகர காவல்துறை பாஜகவிற்கு அனுமதி அளித்துள்ளது.