திருச்சி மாவட்டம், தென்னூர், சவேரியார் கோயில் தெரு அருகே ரேஷன் அரிசி மூட்டைகளை வாகனங்களில் பதுக்கி வைத்துள்ளதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருச்சி சரக டிஎஸ்பி சுதர்சன், ஆய்வாளர் கோபிநாத் மற்றும் உதவி ஆய்வாளர் கண்ணதாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் ஷேக் முக்தார், மதியழகன், முத்துக்குமார், ஈஸ்வரன், ஆறுமுகம் என தெரியவந்தது.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனங்களைச் சோதனை செய்த போது, 50 கிலோ எடை கொண்ட 225 மூட்டைகளில் 11,250 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருச்சி தென்னுரைச் சேர்ந்த பாபு என்கிற சாதிக் பாட்ஷா என்பவர்தான் கள்ளத்தனமாக ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பதற்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மதியழகன், அவர் வீட்டிற்கு எதிரே உள்ள காலி இடத்தை ரேஷன் அரிசியைக் கள்ளத்தனமாகப் பதுக்கி வைப்பதற்கு வாடகைக்கு விட்டுள்ளார். பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.
பிடிபட்ட ஐந்து பேரையும் கைது செய்து, கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனங்களையும், அதில் இருந்த 11,250 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ரூபாய் 82 ஆயிரம் பணத்தையும் கைப்பற்றிய போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியான பாபு என்கிற சாதிக் பாட்ஷா தலைமறைவாகி உள்ளார். தலைமறைவாக உள்ள சாதிக் பாட்ஷாவை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.