தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் பயன்பாட்டை குறைப்பதற்கும் முழுவதுமாய் தடுப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும் பணியினை அரசும், அரசு அலுவலர்களும் மும்முரமாக செய்து வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில், போதைப் பொருட்களுக்கு எதிரான இருசக்கர விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர். இதனை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். திருச்சி எம்.ஜி.ஆர் ரவுண்டானா கோர்ட்டு சாலை அருகில் இருந்து துவங்கிய இந்தப் பேரணி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றது.