Skip to main content

சிக்கும் ரேஷன் அரிசி! தப்பிக்கும் கடத்தல்காரர்கள்! 

Published on 24/05/2022 | Edited on 24/05/2022

 

Caught ration rice! Escape owners !

 

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே திருமண மேடு பகுதியில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருப்பதாகவும், அங்கிருந்து லாரி மூலம் பல்வேறு இடங்களுக்கு கடத்தப்படுவதாகவும் லால்குடி வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த ரகசிய தகவலின் அடிப்படையில், லால்குடி வட்ட வழங்கல் அலுவலர் விஜய், வருவாய் வட்டாசியர் சீசிலினா சுகந்தி, தனி வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்த முயன்ற லாரியை தடுத்து நிறுத்தினர். 

 

குடோனில் உள்ளே ரேஷன் அரிசிகளை அரைக்கும் 9 இயந்திரங்கள் உள்ளிட்ட 88 ரேஷன் அரிசி மூட்டைகளை வட்ட வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த அதிரடி ரெய்டு குறித்து அறிந்த குடோன் உரிமையாளர் ராமலிங்கம் தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு வட்ட வழங்கல் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். குறிப்பாக திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் லால்குடி ஆகிய பகுதிகளில் ரேஷன் அரிசி மூட்டைகள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. 

 

ஏற்கனவே மண்ணச்சநல்லூர் பகுதியில் குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அதனைத்தொடர்ந்து லால்குடி பகுதியில்  சிமெண்ட் கடை என்ற பெயரில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்ட குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து லால்குடி பகுதிகளில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு முறையும் ரைடுக்கு செல்லும் அதிகாரிகள் ரேசன் அரிசி மூட்டைகள் லாரி மற்றும் இயந்திரங்கள் மட்டுமே பறிமுதல் செய்கின்றனர். ரேஷன் அரிசி கடத்தல்காரர்களை தற்போது வரை அதிகாரிகள் கைது செய்யாமல் இருப்பது கேள்விக்குறியாக உள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்