கி.பி. 580ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தச் சுற்றுச்சூழலின் நுழைவாயில் கதவுகள் தற்போது தொல்லியல் துறையால் அகற்றப்பட்டு, தொல்லியல் துறை அலுவலகம் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மலைக்கோட்டையானது புராணங்களிலும் இதிகாசங்களிலும் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
அவற்றில் இந்த மலைக்கோட்டையைக் குறித்து கூறுகையில், ‘இக்குன்றின் மீதுள்ள மூன்று சிகரங்களில் சிவன், பார்வதி, விநாயகர் வீற்றிருந்ததாகவும், ஆதிசேஷனுக்கும் வாயுவிற்கும் இடையில் ஏற்பட்ட பெரும்போரின் விளைவாக, இமயமலைத் தொடரிலிருந்து இந்தியாவின் பல பாகங்களுக்கும் பறந்து சென்ற மலைத் தொகுதிகளில் இதுவும் ஒன்று’ எனவும் கூறுவர். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த மலைக்கோட்டையின் கதவுகள் தற்போது தொல்லியல் துறையால் அகற்றப்பட்டு, கதவுகள் இருந்த இடத்தில் தொல்லியல் துறைக்கான அலுவலக கட்டடம் கட்டப்பட்டுவருகிறது.
இதற்கு திருச்சி பகுதியில் மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், காலத்தால் அழியாத இந்தச் சின்னம் அழிக்கப்படுவது கண்டனத்திற்கு உரியது என்றும் தங்களுடைய பதிவை முன்வைத்துள்ளனர். ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இந்த கதவுகளுக்கு மெயின்காட் கேட் என்று பெயர் வைக்கப்பட்டு, இன்றுவரை அந்தப் பெயரும் அந்தச் சின்னமும் அழிக்கப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது அவற்றை முழுமையாக அழிக்கும் பணியைத் தொல்லியல் துறை துவங்க உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.