கோடை வெயிலின் அளவு 90 டிகிரியை தாண்டியுள்ளதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெய்யிலின் தாக்கத்தால் உடல் சூடு அதிகரித்து பல்வேறு உடல் கோளாறுகளால் மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர். உடலின் வெப்பம் அதிகரிப்பதால் நீர் சுருக்கு, மஞ்சள் காமாலை, நீர் சத்து குறைதல், வயிற்றுப்போக்கு, சரும நோய்கள் என பல்வேறு வெய்யில் கால நோய்கள் தாக்குகின்றன. இதனால் வெளி வேலைகளுக்கு பகலில் செல்வதற்கே அஞ்சுகின்றனர் பொது மக்கள். ஆனாலும் தவிர்க்க முடியாத காராணங்களால், வேலைப்பளுவால் வெளியில் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அவ்வாறு செல்லும் நேரங்களில் வெய்யிலின் சூட்டை தணிக்கவும், வெப்பத்தினால் ஏற்படும் நோய் தாக்குதலிலிருந்து பாதுகாத்து கொள்ளவும் குளிர்பானங்களை, இயற்கையான உணவு பண்டங்களையும் விரும்பி உண்கின்றனர் மக்கள்.
குளிர்ச்சியாக இருக்கும் என கடைகளில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் இரசாயணம் கலந்த கூல்டிரிங்க்ஸ் எனப்படும் குளிர்பானங்களை வாங்கி அருந்துவதால் மேலும் நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். அதேசமயம் இயற்கையான குளிர்பானங்களை, உணவு பொருட்களை உண்பதால் உடல் சமநிலை அடைவதுடன் நோய் தாக்கத்திலிருந்தும் தப்பிக்க முடியும். அதனால் இயற்கையான உணவு பொருட்களை விற்பனை செய்யும் சாலையோர கடைகள் எல்லா ஊர்களிலும் பெருகிவிட்டன.
இளநீர், பனை நொங்கு, தர்பூசனி, வெள்ளரிக்காய், வெள்ளரி பழம் போன்ற இயற்கையான உணவு பொருட்களை விவசாயிகளிடம் நேரிடையாக சென்று குறைந்த விலைக்கு வாங்கி வரும் சிறுவியாபாரிகள் அவைகளை நகர்ப்புரங்களின் சாலையோரங்களிலும், வீதி வீதியாகவும் விற்பனை செய்கின்றனர். உடலுக்கு நல்லது என பொதுமக்களும் அவைகளை விரும்பி வாங்குவதால் விவசாயிகளுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் நல்ல வருவாய் கிடைக்கிறது. இதனால் சூட்டை தணிக்க மக்கள் சாலை ஓரங்களில் முகாமிட்டிருக்கும் இளநீர்,நுங்கு,வெள்ளரிம் மற்றும் பழச்சாறு கடைகளை நோக்கி படையெடுத்துள்ளனர்.
இயற்கையான உணவு பொருட்களை உண்பதால் உடல் நோய்கள் அகல்வதுடன், உள்ளூர் விவசாயிகளுக்கும், சிரு வியாபாரிகளுக்கும் வருவாயும் கிடைக்கிறது.