திருச்சி வடக்கு ஆண்டாள் வீதியில் உள்ள பழைய வீடு ஒன்றை தனிநபர் ஒருவர் விலைக்கு வாங்கியுள்ளார். பின்பு அவர் அந்த வீட்டை இடித்து விட்டு புதிதாக 3 மாடிகளுடன் கூடிய கட்டடத்தைக் கட்டி வந்தார். தரைத் தளத்தை வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் கடை வடிவமைப்பிலும், அதன் மேலே உள்ள தளங்களில் வீடுகள் கொண்ட கட்டடமாகக் கட்டி வந்தார்.
அனுமதி பெறாமலேயே கட்டடத்தின் பாதிக்கும் மேற்பட்ட வேலைகள் முடிவடைந்த நிலையில், மாநகராட்சியில் உரிய அனுமதி பெறாமல் இக்கட்டடம் கட்டப்பட்டு வந்ததை அறிந்த மாநகராட்சி கமிஷனர் வைத்தியநாதன் கட்டடத்திற்கு சீல் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் செயற்பொறியாளர் குமரேசன், உதவி கமிஷனர் ரவி உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், உள்ளூர் திட்டக் குழும அலுவலர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்று அந்தக் கட்டடத்துக்கு சீல் வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.