திருச்சி மாநகர சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலும் சுற்றித் திரிந்த கால்நடைகளைப் பிடித்து அதன் உரிமையாளர்களிடம் இருந்து கடந்த 2 மாதத்தில் ரூபாய் 4.50 லட்சம் அபராதம் விதித்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வசூல் செய்துள்ளது.
திருச்சி மாநகரில் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித் திரியும் உரிமை கோரப்படாத மாடுகளைப் பிடித்து 30 நாட்களில் ஏலம் விடப்பட்டு, அதில் கிடைக்கும் பணத்தை மாநகராட்சி நிதியில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகள், தெருக்கள் மற்றும் பொது இடங்களில் ஆடுகள், மாடுகள், குதிரைகள், பன்றிகள் சுற்றித் திரிகின்றன. இதனால் சாலை விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பொதுமக்கள் அச்சமின்றி சாலைகளில் பயணிக்கவும் தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கால்நடைகளைப் பிடித்து லாரிகளில் ஏற்றி, மாநகராட்சி சார்பில் உறையூர் கோணக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விலங்குகள் பாதுகாப்பு வளாகத்தில் அடைத்து வருகின்றனர். சம்மந்தப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்கள் மாட்டிற்கு தலா ரூ.5000 கன்றுக்கு ரூ.1000 முதல் 2,500 வரையில் அபராதம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.
அந்த வகையில் கடந்த செப்டம்பர், அக்டோபர் ஆகிய இரு மாதங்களில் சுமார் 120 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. அதன் உரிமையாளர்களிடம் இருந்து இதுவரை ₹4.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு கால்நடைகளைத் திருப்பி ஒப்படைத்துள்ளனர்.
சாலைகளில் பறிமுதல் செய்யப்படும் மாடுகளுக்கு மாநகர ஹோட்டல்களில் எஞ்சும் உணவையும் கழிவாக வெளியேற்றப்படும் சாப்பாட்டு இலைகளையும் உணவாக வழங்குகின்றனர். இவ்வாறாக திடக்கழிவு மேலாண்மை பணியை மாநகராட்சி சிறப்பாகக் கையாள்கிறது.
பறிமுதல் செய்யப்பட்டுப் பராமரிக்கப்படும் கால்நடைகளை ஒருமாத காலத்திற்குள் யாரும் உரிமை கோராத நிலையில் அதனை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் நிதியை மாநகராட்சி நிதியில் சேர்க்கப் போவதாக மாநகர மேயர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.