ஊரடங்கால் பொதுமக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் தினம் தினம் போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் இந்த கரோனா நெருக்கடியை வெல்ல- பசியிலிருந்து மக்களை காக்க, உடனே 5 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும், நிரம்பி வழியும் இந்திய உணவுக் கிடங்கைத் திறந்து உணவு தானியங்களை மூன்று மாதங்களுக்கு இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று மாதங்களுக்கு மாதம் ரூபாய் 6,000 வழங்க வேண்டும். மாநில அரசுக்குத் தேவையான நிதி வழங்க வேண்டும், மருத்துவர்கள், செவிலியர்கள், நல்வாழ்வுப்பணியாளர்களுக்குப் பாதுகாப்புக் கருவிகள் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் அவரவர் வீடுகளில் குடும்பத்துடன் வாசலிலும், வீட்டு மாடியிலும் கோரிக்கைகளை அட்டை, தாள்கள், கரும்பலகையில் சுருக்கமாக எழுதி பதாகைகளை கையில் ஏந்தி கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.
கறுப்புத் துணிகளைக் கட்டி கொண்டு நீண்ட வரிசையில் உள்ள சாந்தா சீலா நகர வீதிகளில் குரலெழுப்புவோம். என்கிற கோஷத்தோடு, குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என 80- க்கும் மேற்பட்டோர் அவர்களின் வீடு வாசலில் நின்று கோரிக்கைகள் எழுப்பி முழக்கமிட்டனர்.
மேலும் அவர்கள் கரும்பலகை, சார்ட் அட்டையில் கோரிக்கைகளை எழுதியும், கோலமிட்டும் மாஸ்க் அணிந்து, ஒரு மீட்டர் சமூக இடைவெளி கடைபிடித்து நின்றனர். இந்த போராட்டம் திருச்சி மண்டல மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் முன்னிலை நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட மக்கள் ஐந்து அம்ச கோரிக்கையை நிறைவேற்ற உணர்வு பூர்வமாக முழக்கமிட்டனர்.
இதே போன்று அரவானூரில் மக்கள் அதிகாரம் சார்பில் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பு குழு தோழர் ஞா. ராஜா தலைமையில் அப்பகுதி மக்கள் பங்கேற்புடன் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மக்கள் அதிகாரம் அமைப்புடன் இணைந்து தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் மா.ப. சின்னதுரை ஐந்து அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி போராடினார். அப்போது அவர் அழிவை நோக்கி செல்லும் விவசாயத்தை முழுமையாக பாதுகாத்திட திட்டம் வகுத்திடு! என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.