Skip to main content

ஒன்றிய அலுவலகத்தில் பெண் ஊழியர் தனது மகனுடன் தற்கொலை முயற்சி!

Published on 02/10/2020 | Edited on 02/10/2020

 

mother and son issue in mannargudi

 

மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றிவரும் பெண் ஒருவர் தனது பிள்ளையுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சம்பவம் யூனியன் அலுவல வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளது. 

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்தவர் ஆனந்தி. இவர் கடந்த  4 ஆண்டுகளாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணினி பிரிவு மையத்தில்  பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பயணாளிகளின் அனைத்து விவரங்களையும் கணினி பொறியில் பதிவேற்றம் செய்யும் வேலையை செய்து வருகிறார். 

 

இந்நிலையில் 2017-2019-ம் ஆண்டிற்கான பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தலையாமங்கலம் ஊராட்சியில் 174  வீடுகள் மற்றும் 225 கழிப்பறைகளை காணவில்லை என புகார் எழுந்தது. இதனை நமது நக்கீரன் இதழில் ஆதாரத்தோடு செய்தியாக்கினோம். அதனை தொடர்ந்து  அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றிய ராஜா, உதவி பொறியாளர் சண்முக சுந்தரம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி, பணிகள  மேற்பார்வையாளராக  வேலை பார்த்த பிரபாகரன் ஆகிய நான்கு ஊழியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

 

அதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் தற்காலிக பனியாளரான ஆனந்தியை தகாத வார்த்தைகளால் திட்டி இனிமேல் பணிக்கு வரவேண்டாம் என சொன்னதால் ஆத்திரம் அடைந்த ஆனந்தி தனது மகன் ரிஷி லோகனோடு ஊராட்சி மன்ற அலுவலக முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


 
இதுகுறித்து ஆனந்தி கூறுகையில்,"வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது.  ஆளும் கட்சி அராஜகத்தில் ஈடுபட்டதை எதிர்க்கட்சியினர்  தட்டிகேட்டதால் அந்த ஊழல் தெரிந்தது. எந்த தவறும் செய்யாத என்னை 1 மாதகாலமாக பணியிடை நீக்கம் செய்யதுள்ளனர்.  அதிகாரிகளுக்குள்ளேயே ஏகப்பட்ட ஊழல், பிரச்சனையை வைத்துக்கொண்டு என்னை பழிவாங்குவது என்ன நியாயம், அவர்கள் சொல்வதை நான் கணினியில் ஏற்றமுடியும், நானா களத்திற்குச் சென்று பார்க்க முடியும், பெரிய தலைகள் தப்பிக்க எங்களை போன்ற அப்பாவிகளை பழிவாங்குறாங்க, மீண்டும் வேலை வழங்கவேண்டும் இல்லை என்றால் என் பிள்ளையோடு செத்துப்போவது உறுதி." என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்