
திருச்சியில் இருந்து குவைத் நாட்டிற்கு நேரடி விமான சேவை இல்லாமல் இருந்த நிலையில், சென்னையில் இருந்தோ, பெங்களுரில் இருந்தோ செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில், திருச்சியில் இருந்து குவைத்திற்கு விமான சேவை வழங்க வேண்டும் என விமான பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்துவந்தனர்.
இந்நிலையில் தற்போது, திருச்சியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் குவைத்திற்கு நேரடி வாராந்திர விமானசேவை நேற்று முதல் தொடங்கியது. இந்த விமான சேவையானது, ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் மதியம் 12.50-க்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து பயணிகளுடன் புறப்பட்டு குவைத் நேரப்படி, மாலை 4.10 மணிக்கு குவைத் சென்றடையும். மீண்டும் அந்த விமானமானது குவைத் நேரப்படி, 5.10 மணிக்கு குவைத்தில் இருந்து புறப்பட்டு இந்திய நேரப்படி நள்ளிரவு 12.35 மணிக்கு, திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடையும். வாரத்தில் ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளிலும் இச்சேவை வழங்கப்படுவதுடன், ஜூன் 25-ம் தேதி முதல் சனிக்கிழமைகளில் இந்த விமானம் இயக்கப்படவுள்ளதாகவும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.