தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் கடந்த 2ஆம் தேதி திருச்சி லலிதா ஜூவல்லவரி நகைக்கொள்ளை. கொள்ளையர்களை பிடிக்க உடனே தனிப்படை அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதில் திருவாரூரில் மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சுரேஷ் என்பவர் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அதனைத் தொடர்ந்து திருவாரூரைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தான்.

மேலும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குருவித்துறை பகுதியை சேர்ந்த கணேசனையும் போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. நகைகளும் மீட்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது சில தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலையில், திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகள் அனைத்தையும் முருகன் கும்பல் உருக்கி விற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 470 சவரன் நகைகள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சொந்தமானது. நகைகள் உருக்கப்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து வாடிக்கையாளர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

மேலும், விசாரணையில் திருச்சியில் பஞ்சாப் நேஷனல் வங்கி, லலிதா ஜூவல்லரி கொள்ளைகளுக்கு பயன்படுத்திய சுற்றுலா வேன் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். முருகன் கொடுத்த தகவலின் படி மறைத்து வைக்கப்பட்டிருந்த வேனை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்டவுடன், சுற்றுலா பயணிகள் போல கொள்ளைக்கும்பல் வேனில் ஏறி தப்பித்துச்சென்று விடுவதை வழக்கமாகக் வைத்துள்ளனர். மேலும் வேனிலேயே நகைகளை எடைபோட இயந்திரமும் வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை தொடர்பாக கணேசன் தந்த தகவலின்பேரில் 3 பேரைபிடித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.